கன்னியாகுமரியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு... 7000 ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு

0 5811

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாகக் கனமழை பெய்ததால் தாமிரபரணி, பழையாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏழாயிரம் ஏக்கர் பரப்பில் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவான புயலின் காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது. புதனன்று அதிக அளவாக இரணியலில் 28 சென்டிமீட்டர் மழை பதிவானது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தக்கலையில் 9 சென்டிமீட்டரும், பேச்சிப்பாறை, சிற்றாறு ஆகிய இடங்களில் 8 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாகக் கனமழை பெய்ததால் தாமிரபரணி, பழையாறு ஆகியவற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. குழித்துறை தரைப்பாலத்தை மூழ்கடித்துத் தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

தொடர்ந்து கனமழை பெய்வதாலும் ஆற்றுவெள்ளம் புகுந்ததாலும் ஏழாயிரம் ஏக்கர் பரப்பில் வாழை, மரவள்ளி, நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பயிர்கள் அழுகி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

48 அடி கொள்ளளவு உள்ள பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 43 அடியைத் தாண்டியுள்ளது. அணைக்கு நொடிக்கு 1500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர்மட்டம் 44 அடியைத் தாண்டினால் அணையின் பாதுகாப்புக் கருதி அதிக அளவுத் தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படும். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழையுடன் பலத்த சூறைக் காற்று வீசியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் புயல் உருவாகியுள்ளதால் மீனவர்கள் மூன்று நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. இதனால் தேங்காய்ப்பட்டினம், குளச்சல் மீன்பிடி துறைமுகங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற விசைப்படகுகளும் கரை திரும்பியுள்ளன. பலத்த காற்று வீசுவதால் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிகச் சீற்றத்துடன் காணப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments