நிரம்பும் மருத்துவமனைகள்..! காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்...

0 3098
நிரம்பும் மருத்துவமனைகள்..! காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்...

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பி வருவதால், சில இடங்களில் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூடுதலாக படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் : நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் முழுவதுமாக நிரம்பியதால், சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகள் திருச்சி மற்றும் சேலத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

இதனிடையே நாமக்கல்லில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் 50 படுக்கைகளுடன் தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கப்பட்ட நிலையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் பூட்டப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 200 படுக்கைகளும் நிரம்பியதால் சிகிச்சைக்காக புதிதாக வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்திரா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய  54 படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அங்கு திங்கட்கிழமை முதல் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளும் நிரம்பியதால், புதிதாக வரும் நோயாளிகள் காலியாகவுள்ள சாதாரண படுக்கைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆக்சிஜனை பொறுத்தவரை இதுவரை பற்றாக்குறை ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டு முன்பு முகாமிட்டுள்ள காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

சேலம் : அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள 966 ஆக்சிஜன் படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பின.

இதேபோல் மாநகராட்சி தொங்கும் பூங்கா, கோரிமேடு சித்தா மையம், அன்னதானப்பட்டி சட்டக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பின. இதனிடையே சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அரிசிப்பாளையத்தை சேர்ந்த 65 வயதான சுப்பிரமணி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மொத்தமுள்ள 370 படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பியதால், புதியதாக வரும் நோயாளிகள் மருத்துவமனை வாசலிலேயே காத்திருக்கின்றனர்.

சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலோ அல்லது உயிரிழந்தாலோ தான் புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்கும் நிலை எற்பட்டுள்ளது. நோயாளிகளுடன் அவர்களது உறவினர்களும் மருத்துவமனைக்கு அதிகளவில் வருவதால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை : கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அனைத்தும் தொடர்ந்து 3வது நாளாக நிரம்பியுள்ளது.

அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள ஆயிரத்து 55 படுக்கைகளில் 717 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. இவை முழுவதுமாக நிரம்பியதால், மூச்சுத் திணறலுடன் வரும் நோயாளிகள் சாதாரண படுக்கைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இஎஸ்ஐ  மருத்துவமனையிலுள்ள 300 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியதால், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments