கொரோனா கட்டளை மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

0 3730
கொரோனா கட்டளை மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று இரவு சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் கட்டளை மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக ஒருங்கிணைந்த கட்டளை மையம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டது.

24 மணி நேரமும் செயல்படும் இந்த மையத்தில் 104 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் பெறப்படும் பொதுமக்களின் அழைப்புகள் முறையாக கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்நிலையில், இந்த மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு பார்வையிட்டார். தகுதி வாய்ந்த மருத்துவ அலுவலர்கள் பரிசீலிக்கப்பட்டு தேவையான உதவிகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதை நேரில் கேட்டறிந்தார்.

இம்மையத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் ஏற்பாடு செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்வது ஆகிய நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வந்த தொலைபேசி அழைப்பை எடுத்த ஸ்டாலின், அதில் பேசிய வானகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கோரிக்கையை ஏற்று, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கை வசதி வழங்க உத்தரவிட்டார்.

மையத்தின் மூலம் சென்னை மாநகரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியிட விவரத்தினை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

பெறப்படும் அனைத்து அழைப்புகளுக்கும் முறையான ஆலோசனைகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments