பாடி பில்டர் பாடியை கொடுக்க அடம்பிடித்த வசூல் ஆஸ்பத்திரி.. ! திமுக பிரமுகர் உதவி

0 12625

சென்னை திருவிக நகரைச் சேர்ந்த 50 வயதான பாடிபில்டர் ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி குமரன் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க, மருத்துவமனை நிர்வாகம் மேலும் இரண்டரை லட்சம் ரூபாய் கேட்டு அடம் பிடித்தது.  திமுக பிரமுகரின் உதவியால் அந்த கட்டணத்தை செலுத்தாமலேயே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

சென்னை திருவிக நகரை சேர்ந்த பாடிபில்டர் செல்வபாண்டியன். 50 வயதான இவர் பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளார். பேரீச்சம் பழச்சாறு உள்ளிட்ட இயற்கை உணவுகளையே முழுமையாக எடுத்துக் கொணடு உடலை பேணி வந்த செல்வபாண்டியனுக்கு கடந்த மாதம் 28 ந்தேதி லேசான இருமல் ஏற்பட்டதால் எருக்கஞ்சேரியில் உள்ள கே.வி.டி மருத்துவமனையில் பரிசோதித்துள்ளார்.

கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்ததை தொடர்ந்து, தெரிந்தவர்களின் ஆலோசனையின் படி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள குமரன் மருத்துவமனையில் செல்வபாண்டியன் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இங்கு வைத்து இவருக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதாக கூறி இரு தவணைகளாக ஒரு லட்சம் ரூபாயும் 3 வது தவணையாக 3 லட்சம் ரூபாயும் குமரன் மருத்துவமனை நிர்வாகம் பெற்றுள்ளது. ஆனால் திடகாத்திரமான உடலுடன் சென்ற செல்வ பாண்டியன் 10 நாட்களில் உடல் மெலிந்த நிலையில் மூச்சுவிட சிரமப்பட்டு உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்த தகவலை தெரிவித்த மருத்துவமனை நிர்வாகத்தினர், மேற்கொண்டு 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் தந்தால் தான் சடலத்தை ஒப்படைக்க முடியும் என்று அடம் பிடித்துள்ளனர்.

உறவினர்கள் பலமுறை பேசியும் தீர்வுகாண இயலாத நிலையில் திமுக வட்டப் பிரதிநிதி மகேஷ் குமார் தலைமையில் திமுகவினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போதும் மீதி பணத்தை கட்டச்சொல்லி மருத்துவமனை நிர்வாகம் கறார் காட்டியுள்ளது. மகேஷ்குமார் தலைமையிலான திமுகவினர் சாலையில் அமர்ந்து மறியல் செய்வோம் என்று கொந்தளித்தவுடன் சடலத்தை ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக் கொணடுள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் கொரோனாவால் உயிரிழந்த செல்வ பாண்டியனுக்கு வழங்கியுள்ள பில்லை பார்த்தாலே வரம்பு ஏதுமின்றி வசூலிக்கப்பட்ட கட்டண விவரம் வெளிச்சத்துக்கு வரும் என்கின்றனர் உறவினர்கள். செல்வபாண்டியன் கடந்த 28ந்தேதி மாலை முதல் 14ந்தேதி வரை 16 நாட்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் முறையான சிகிச்சை வசதி அளித்தும் அவரை காப்பாற்ற இயலாமல் போய்விட்டது என்று கூறியுள்ள மருத்துவமனை நிர்வாகம், தாங்கள் தான் இறந்தவர் குடும்பத்தின் கஷ்டத்தை உணர்ந்து மீதிப்பணத்தை கட்ட வேண்டாம் என்று விட்டுக் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

கொரோனாவின் கோரத்தாண்டவத்தை பயன்படுத்தி இருப்பவனிடம் மட்டும் அல்ல இறந்தவனிடமும் இருப்பதையெல்லாம் உருவிக்கொள்வதில் சில வசூல் ஆஸ்பத்திரிகள் கறாராக இருப்பது வேதனையின் உச்சம். இத்தகைய வசூல் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதே நேரத்தில் மூன்று வேளையும் இயற்கை உணவுகளை உண்டு உடலை திடக்காத்திரமாக வைத்திருந்த பாடி பில்டருக்கே கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பில்லை, அதனால் வீட்டிற்குள்லேயே அடங்கி இருங்கள் அனாவசியமாக வெளியில் சுற்றி நோயை பெற்று உடன் இருப்பவர்களையும் அவதிக்குள்ளாக்காதீர் என்பதே காவல்துறையின் கனிவான வேண்டுகோளாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments