தீவிரமாகும் ஊரடங்கு... போலீசார் கெடுபிடி ஆரம்பம்..!

0 20454
தீவிரமாகும் ஊரடங்கு... போலீசார் கெடுபிடி ஆரம்பம்..!

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதியை மீறி வெளியே சுற்றித்திரிவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்தும் வகையில், சென்னை கோட்டூர்புரம், அண்ணா சாலை, சென்ட்ரல், கோயம்பேடு, பூந்தமல்லி சாலை உள்ளிட்ட இடங்களில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. உரிய ஆவணங்களுடன் வருவோர் மட்டுமே சாலைகளில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். தேவையின்றி வெளியே வருவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மத்திய கைலாஷ், அடையாறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகன போக்குவரத்து காணப்படுவதால், கூடுதல் எண்ணிக்கையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிவோருக்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பினர்.

திருவண்ணாமலையில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மடக்கி பிடித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வலியுறுத்தினர்.

மதுரையில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலையில் நண்பகல் 12 மணிக்குப் பின்னரும் ஏராளமானோர் வாகனங்களில் சுற்றி திரிந்ததை அடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீசார், 400க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை மடக்கிப் பிடித்து, தொற்று நோய் பரப்பும் விதத்தில் செயல்பட்டதாக வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சேலம்; சேலத்தில் ஊரடங்கை மீறி யாரும் வெளியில் சுற்ற வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.

தஞ்சையில் நண்பகல் 12 மணிக்கு மேல் அவசியத் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றியோரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். நகர் முழுவதும் 8 இடங்களில் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோட்டில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிவோருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

 

கோவையில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வாகனங்களில் சுற்றித் திரிபவர்களை போலீசார் செல்போனில் புகைப்படம் எடுத்து அபராதம் விதித்தனர். மேலும், முகக் கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments