குமரி மாவட்டத்தில் கனமழை..! 5000 ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு...

0 4267
குமரி மாவட்டத்தில் கனமழை..! 5000 ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு...

ன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐயாயிரம் ஏக்கர் பரப்பில் நெல் வாழைப் பயிர்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கன மழை பெய்தது.

அதிக அளவாக இரணியலில் 28 சென்டி மீட்டரும், குருந்தங்கோட்டில் 12 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால் கன்னியாகுமரி மாவட்டத்தின் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது.

கரையைக் கடந்து வெள்ளம் பாய்வதால் சிதறால், திக்குறிச்சி,குழித்துறை, வைக்கலூர், அஞ்சாலிக்கடவு ஆகிய ஊர்களில் ஆற்றங்கரையோரம் ஐயாயிரம் ஏக்கர் பரப்பில் வாழைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

திக்குறிச்சியில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததில் வாழை, நெல், காய்கறிப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

பெயர்பெற்ற சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கனமழை பெய்து வருவதாலும், அரபிக் கடலில் புயல் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் குமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டு வந்த குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பியுள்ளன.

ஐந்நூற்றுக்கு மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments