நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... கூடுதலாக படுக்கைகள் அமைக்க ஏற்பாடு..!

0 2849
நிரம்பி வழியும் மருத்துவமனைகள்... கூடுதலாக படுக்கைகள் அமைக்க ஏற்பாடு..!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பி வருவதால், சில மருத்துவமனைகளில் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலையில் கூடுதலாக படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதால், நோயாளிகள் பல மணி நேரமாக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட்டது. அதே சமயம், ஓமந்தூரார் மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகளும் நிரம்பியதால், கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ்களிலேயே நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஆட்டோ மூலம் அழைத்து வரப்பட்ட நோயாளிகள் பார்வையாளர் இருக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் அனைத்து ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியதால், அவசர சிகிச்சைக்காக புதியதாக வரும் நோயாளிகள் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் முக்கால்வாசி ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக கல்லூரி வளாகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது

சேலம் அரசு மருத்துவமனையிலுள்ள 800 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியதால், கூடுதலாக 150 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில், குமரன் கல்லூரியில் கூடுதலாக 112 ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால், அவசர சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகள் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள 360 ஆக்சிஜன் படுக்கைகளும் முழுமையாக நிரம்பின. கூடுதலாக 200 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 890 படுக்கைகள் நிரம்பியதுடன், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆனால் மட்டுமே புதிய நோயாளிகளை அனுமதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இல்லாததால், அவசர சிகிச்சைக்காக வந்த கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ்களிலேயே காத்திருந்தனர்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 150 படுக்கைளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையிலும் படுக்கைகள் முழுவதும் நிரம்பின. இதுமட்டுமின்றி, அவசர சிகிச்சை பிரிவில் ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் 4 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தப்படும் அவலமும் ஏற்பட்டுள்ளது. விரைவில் 50 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பயன்பாட்டுக்கு வரும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 200 படுக்கைகளும் நிரம்பிவிட்டதால், அங்குள்ள இந்திரா மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் 60 படுக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயார் செய்யப்படுகிறது

கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தினந்தோறும், 6 நோயாளிகள் உயிரிழப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தஞ்சை அரசு மருத்துவமனையில் 677 படுக்கைகளும் நிரம்பியதால், ராஜா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் ஒரு பகுதி 250 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments