ஊரடங்கை தீவிரமாக்க முடிவு.. அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

0 5494

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரப்படுத்துவது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக சார்பில் அக்கட்சி பொருளாளர் டி.ஆர்.பாலு அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா உள்ளிட்ட 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிகள் கலந்து கொண்டனர்.

கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை வழங்க சட்டமன்ற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட குழு அமைப்பது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது. பொதுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது. அனைத்து கட்சியினரும் கள அளவில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க மக்களை வலியுறுத்த வேண்டும், அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் ஆகிய 5 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, பேசிய முதலமைச்சர், 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு செலுத்த வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரும் நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வரும் நிலையில், கூடுதல் எண்ணிக்கையிலான படுக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

கூட்டம் முடிந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக சார்பில் வலியுறுத்தியதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments