மருத்துவமனை முன்பு கொரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸ்களில் காத்திருக்க வைக்க கூடாது... தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

0 3727

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதே சமயம் கொரோனா நோயாளிகளை ஆம்புலன்சில் காத்திருக்க வைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை நடைமுறை, ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் பற்றாக்குறை தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

அப்போது வழக்கறிஞர் நவீன் மூர்த்தி என்பவர் ஆஜராகி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆம்புலன்சில் காத்திருந்த ஒன்பது பேர் உயிரிழந்தது குறித்து முறையிட்டார்.

அப்போது, தமிழக அரசு மேற்கொண்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாகவும், அதே சமயம் தற்போதைய சூழலை போர்க்காலம் போல் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

மேலும் மருத்துவமனைகளில் தற்காலிக படுக்கைகளாக ஸ்ட்ரெச்களை பயன்படுத்தவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தமிழகத்தில் மூடப்பட்ட, செயல்பாட்டில் இல்லாத மருத்துவமனைகளை தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவது குறித்து ஆராய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள உயர்நீதிமன்றம், உயிரிழந்தவர்கள் உடல்களை ஒப்படைக்க மற்றும் மயானங்களில் உடல்களை தகனம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோல் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும் சிறைகளில் கொரோனா சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே அரசு மருத்துவமனைகளில் யாருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ள தமிழக அரசு, ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வழக்கு விசாரணை 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments