தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பின : ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நோயாளிகள்

0 3365
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பின : ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நோயாளிகள்

மிழகத்தில் கொரோனா அதி தீவிரமாக பரவிவரும் நிலையில், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால், நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கிகிச்சைக்காக வந்து படுக்கை வசதி கிடைக்காமல் பல மணி நேரமாக ஆம்புலன்ஸில் காத்திருந்த மேலும் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவ்வாறு, மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்து பலியானோரின் எண்ணிக்கை மட்டும் 9ஆக உயர்ந்துள்ளது.

அதேபோன்று, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், படுக்கைகள் நிரம்பியதால் மருத்துவமனைக்கு வெளியே கூடாரம் அமைத்து தற்காலிகமாக ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில், அவசர சிகிச்சைக்கு வருவோர் படுக்கை இல்லாததால் ஆம்புலன்ஸிலேயே காத்திருந்தனர்.

காஞ்சிபுரத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 347 ஆக்சிசன் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 360 ஆக்சிஜன் படுக்கைகளில் 270 படுக்கைகள் நிரம்பின.

அதன் காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் மற்றும் சேய் நல கட்டடத்தில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் 347 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் - முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், செஞ்சி, திண்டிவனம் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாதாகவும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 8 மணிக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா படுக்கைகள் அனைத்தும்  நிரம்பியதால், மருத்துவர்களும், செவிலியர்களும் சிகிச்சை அளிக்க திணறி வருவதாக கூறப்படுகிறது.

உயிரிக்கொல்லியான கொரேனாவின் 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு தினசரி 250க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றார்கள் சிகிச்சைக்காக வருவதாகவும்,142 சிலிண்டர்கள் மட்டுமே இருப்பதால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையிலுள்ள 1561 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டதால், யாரேனும் டிஸ்சார்ஜ் செய்தால் மட்டுமே புதிதாக சிகிச்சை பெற வருபவர்களை அனுமதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை இ.எஸ்.ஐ மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அனைத்தும் முழுவதுமாக நிரம்பியது.

அதேசமயம், சில தனியார் மருத்துவமனைகளில், முன்பணம் கட்ட சம்மதம் தெரிவிப்பவர்களை மட்டுமே அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையிலுள்ள 900 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும் நிரம்பிவிட்ட நிலையில், புதிதாக வரும் நோயாளிகளை, பரிசோதித்து வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இருப்பினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 260 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும் நிரம்பியதால், கூடுதலாக 347 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு வருவோர் போதிய மருத்துவர்கள் இல்லாததால், ஆங்காங்கே கிடைத்த இடத்தில் படுத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பின.

100  சாதாரண படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. 

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிறைந்து விட்டன.

இதனால் அவசர சிகிச்சைக்கு புதிதாக வரும் நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை.

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 200 ஆக்ஸிஜன் படுக்கைகளும் நிரம்பியதால் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கின்றனர்.

அவர்களில் ஒரு சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் பெருமளவு நிரம்பிவிட்டன.

அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு உணவு, மின்விசிறி போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரோடு, பெருந்துறை அரசு மருத்துவமனையில்,போதிய ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்ஸிலேயே நோயாளிகள் காத்து கிடக்கின்றனர்.

தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றக்குறை காரணமாக நோயாளிகளை அனுமதிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பியதால் நோயாளிகள் பல மணி நேரமாக ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கின்றனர்.

கூடுதலாக, 244 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் இணைப்புகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதனிடையே, தஞ்சை மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், பலர் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள முடியவில்லை என புகார் எழுந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments