ஆக்ஸிஜனுக்காக சக்திகொடுக்கும் தன்னார்வலர்கள்..! பஸ் முதல் பந்தல் வரை தயார்

0 3802

தமிழகத்தில் ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கையின்றி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூச்சுத்திணறி வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு வசதியாக ஆக்ஸிஜன் பேருந்து மற்றும் பந்தல் தயார் செய்து திருப்பூர் தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

பசி என்பவருக்கு புசி என்று கொடு என்பதை போல பேரிடர் காலங்களில் தேவையறிந்து உதவுவது அவசியம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பல நல்ல உள்ளங்கள் லட்சங்களை அள்ளிக் கொடுத்து வரும் நிலையில் திருப்பூரில் உள்ள தன்னார்வலர்கள் சிலர் ஒன்று கூடி அரசு மருத்துவமனைக்கு வெளியே ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் நோயாளிகளின் உயிர் காக்க ஆக்ஸிஜன் பேருந்து ஒன்றை வடிமைவைத்துள்ளனர்.

எஸ்.என்.எஸ் பள்ளி நிர்வாகம் வழங்கிய பேருந்தில் , சக்தி நர்சிங்கோம் நிர்வாகம், இருக்கைகளில் போதிய இடைவெளி விட்டு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 ஆக்ஸிஜன் கான்சன்ரேட்டர்களை பொறுத்தியுள்ளனர். சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மெஜஸ்டிக் எக்ஸ்போர்ட்ஸ், யங் இந்தியன் அமைப்பு, திருப்பூர் ரைடர்ஸ் கிளப் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த ஆக்ஸிஜன் பேருந்து தயாராகியுள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்க ஆகும் இடைப்பட்ட நேரத்தில் சம்பந்தப்பட்ட நோயாளிகள் இந்த பேருந்தில் அமர்ந்து ஆக்ஸிஜன் மூலம் சுவாசத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மூச்சுத்திணறலல் அவதிப்படும் நோயாளிகளுக்காக இந்த சேவை இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஒரே நேரத்தில் 5 பேர் ஆக்ஸிஜன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற நல்ல உள்ளம் கொண்ட கொடையாளர்களின் உதவியை பொறுத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதே போல சக்தி நர்சிங்கோம் மருத்துவமனைக்கு வெளியே கட்டணமின்றி ஆக்ஸிஜன் எடுத்துக் கொள்ளும் வகையில் ஆக்ஸிஜன் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வசதி இல்லாதவர்கள் இந்த இலவச ஆக்ஸிஜன் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஒரே நேரத்தில் 10 நோயாளிகள் இந்த பந்தலில் அமர்ந்து ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் சக்திவேல்.

நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் மக்களை காக்க அரசுடன் இணைந்து சமூக தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்றதை கொடுத்து கரம் கோர்த்தால் இந்த பெருந்தொற்றில் உயிரிழப்பை குறைத்து வென்றுக்காட்டலாம். அதே நேரத்தில் அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்த்தாலே நோய் பரவலை தடுப்பதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் மகத்தானதாக இருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments