சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காத பரிதாபம்.. ஒரே நாளில் 6 பேர் பலி

0 4543

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காததால், ஆம்புலன்ஸில் காத்திருந்த கொரோனா நோயாளிகள் 6 பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலுள்ள 785 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இருப்பினும், புறநகர் பகுதிகள் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருவோர், படுக்கை வசதி கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே மருத்துவமனை வாயிலிலும், வெளியேயும் பல மணி நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நோயாளிகளுடன் வரிசை கட்டி நிற்கிறது.

உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் யாராவது டிஸ்சார்ஜ் ஆனாலோ அல்லது இறந்தாலோ தான் மற்ற நோயாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் அவலமும் உண்டாகியுள்ளது.

பெரும்பாலான நோயாளிகள், வீட்டில் இருந்தே மூச்சுத்திணறல் ஏற்பட்டு தான் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு ஆம்புலன்ஸில் இருக்கும் ஆக்சிஜன் போதுமானதாக இல்லை. உடனடி சிகிச்சை கிடைக்காமல் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. புதன்கிழமை ஒரு நாளில் மட்டும் மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனை வாசல் வரை வந்து, பல மணி நேரமாக காத்திருந்தும் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு, நிலைமையையும் உணர்த்துகிறது. இதனிடையே படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்சில் காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments