ஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க்கும் மனிதநேயமற்ற ஜென்மங்கள்..!

0 3729

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உயிர்காக்கும் ஆக்சிஜனுக்கான தேவையை பயன்படுத்தி, அதனை நான்கு மடங்கு விலை உயர்த்தி சென்னையில் கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. மரணத்திலும் காசு பார்க்கும் மனிதநேயமற்ற ஜென்மங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இதனால், வாயு மண்டலத்தில் இருந்து ஆக்சிஜனை இயற்கையாக ஈர்த்தெடுக்கும் திறன் நுரையீரலுக்கு குறைகிறது. அந்த சமயத்தில், நோயாளிகளுக்கு செயற்கையாக ஆக்சிஜன் செலுத்தப்பட வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான நோயாளிகள். ஆக்சிஜன் தேவையுடன் மருத்துவமனைகளில் போராடி வருவதால், ஆக்சிஜனுக்கான தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த ஆக்சிஜனும் மருத்துவத்துக்கு திருப்பிவிடப்படுகிறது.அதே சமயம் கொரோனா பாதிக்கப்பட்ட பலர் சொந்தமாக போர்ட்டபில் ஆக்சிஜன் சிலிண்டர் (portable oxygen cylinder) வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஆக்சிஜனுக்கான தேவையை பயன்படுத்தி சென்னையில் சிலர் அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எதிரே மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைந்துள்ளன. அங்குள்ள சில கடைகளில் அதே 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் 19ஆயிரம் ரூபாய் என கொள்ளை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் 24ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

4 மடங்கு கூடுதல் விலை வைத்து பணம் சம்பாதிப்பதோடு, ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க வருபவர்களுக்கு உரிய ரசீதும் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. அநியாய விலைக்கு விற்பனை செய்வது வெளியில் தெரியாமல் இருக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து ரொக்கமாக தான் பணம் வழங்கவேண்டும் எனவும் ஆன்லைன் மூலமாகவோ, கிரடிட் கார்டுகளை வாங்க அந்த கடை உரிமையாளர்கள் மறுக்கின்றனர்.

அவசர தேவைக்காக வாடிக்கையாளர்கள் விலையைக் குறைத்துக் கேட்டால், பெரிய மனது பண்ணி விலையைக் குறைப்பது போல வெறும் 500 ரூபாய் மட்டுமே குறைக்க முன்வருகின்றனர் அந்த கள்ள ஆசாமிகள்.

அதே சமயம் அதே பகுதியில் 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சிலிண்டர் சில நல் உள்ளம் கொண்டவர்களின் கடைகளில் 4500ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

தேவையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் படும் கஷ்டங்களை புரிந்து கொண்டு பொறுப்புணர்வுடன் உரிய விலையில் விற்பனை செய்யும் இதுபோன்ற நல்லவர்களின் செயல் மனித நேயம் இன்னும் மடிந்துவிடவில்லை என்பதை காட்டுகிறது.

கள்ளச்சந்தையில் ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனை செய்வதை தடுக்க குழு அமைக்கவும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments