நிரம்பும் மருத்துவமனைகள்.. மக்கள் கவனமாக இருக்க வேண்டும்..!

0 6267
தமிழகத்தில் கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால், புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிக்க முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால், புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிக்க முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சென்னை கிங்ஸ் மருத்துவமனை, ராஜீவ் காந்தி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதால் சுமார் 50 ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் காலை முதலே காத்திருக்க நேரிட்டது. இவ்வாறு காத்திருந்தவர்களில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களின் உறவினர்கள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். 

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆனதும் காத்திருக்கும் நோயாளிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சேலம் அரசு மருத்துவமனையில் அனைத்து படுக்கைளும் நிரம்பியதால், கூடுதலாக 300 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன. அதேபோன்று இரும்பாலை பகுதியிலும் 500 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட மொத்தமுள்ள 890 படுக்கைகளும் நிரம்பிவிட்டன. மாவட்டத்தில் ஒரு நாளைக்கு எட்டு டன் அளவு ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில், தற்போது, 3.9 டன் மட்டுமே கையிருப்பில் இருக்கிறது.

படுக்கை வசதி இல்லாததால் ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு வெளியே வாகனங்களில் காத்திருந்த நோயாளிகள், தனியார் கல்லூரியில் அமைக்கபட்ட கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கபட்டனர்.

கோவையில் இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியதால், நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட கொரோனா நோயாளிக்கு ஆம்புலன்சிலேயே பல மணி நேரம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அனைத்து படுக்கைகளும் நிரம்பிய நிலையில், நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் கூறியதால், நோயாளியின் மனைவியும், மகளும் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கொரோனா வார்டில் உள்ள ஆக்ஸிஜன் படுக்கைகள் பாதிக்கும் மேல் நிரம்பின. மேலும் 244 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனைத்து ஆக்ஸிஜன் படுக்கைகளும் நிரம்பியதால், புதிதாக வரும் நோயாளிகளுக்கு இடம் கிடைக்கவில்லை.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள 200 ஆக்ஸிஜன் படுக்கைகளில் 175 படுக்கைகள் நிரம்பியுள்ளது. மேலும் 600 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 525ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைளில் 91 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது.

வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் முழுமையாக நிரம்பியதால், புதிதாக வரும் நோயாளிகளுக்கு ஆம்புலன்சில் வைத்தே சிகிச்சை அளிப்பதுடன், அவசர சிகிச்சை பிரிவில், ஒரு சிலிண்டர் மூலம் 5 பேருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், புதிதாக வரும் நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்க மடைந்து மருத்துவமனையின் வாசலிலும், மரத்தடிகளிலும் படுத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

மதுரை அரசு மருத்துவமனையில் 816 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்பட மொத்தமாக 1,632 கொரோனா படுக்கைகள் உள்ளன. தற்போது இவை அனைத்தும் நிரம்பிவிட்டன.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments