தமிழகம் முழுவதும் 14 நாட்கள் முழுஊரடங்கு அமலுக்கு வந்தது... கடைகள் அடைக்கப்பட்டதால் நகரங்கள் வெறிச்சோடின...

0 3518
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து காய்கறி, பழம், இறைச்சி மீன் விற்கும் கடைகள், மளிகைக் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து காய்கறி, பழம், இறைச்சி மீன் விற்கும் கடைகள், மளிகைக் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டன.  மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் இரண்டு வார கால முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து, சென்னை மாதவரம், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்களும் காவல்துறையினரும் இணைந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். இன்றியமையாத் தேவைகள் பணிகளுக்கான வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிந்தோருக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர். நண்பகலுக்கு மேலும் திறந்திருந்த கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து மூடச் செய்தனர்.

 

காஞ்சிபுரத்தில் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சி, மீன் விற்கும் கடைகள் நண்பகல் வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. நண்பகலுக்குப் பின் அவையனைத்தும் மூடப்பட்டன. மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோரைத் தவிரத் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தோருக்கு போலீசார் 200 ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.

 

திருப்பூர் சந்தைப்பேட்டையில் நண்பகலுக்குப்பின் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் குமரன் சாலை, பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகள் வாகனப் போக்குவரத்தும், ஆள் நடமாட்டமும் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

 

முழு ஊரடங்கையொட்டி மதுரையில் பெரும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம், தனக்கன்குளம், பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம் வலையங்குளம் ஆகிய 6 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்துக் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். இன்றியமையாப் பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கும், இன்றியமையாப் பணிக்குச் செல்வோருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

 

தமிழகத்திலும், கேரளத்திலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருமாநில எல்லைப் பகுதிகள் ஆள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. கேரளத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருபவர்களை எல்லையில் தடுத்து நிறுத்தி இ - பாஸ் உள்ளதா எனச் சரிபார்த்தும், காய்ச்சல் உள்ளதா எனச் சோதனை செய்தும் அதன்பின்னரே அனுமதிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments