ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்து - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0 1645
தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் தேவையான ஆக்சிஜன், கொரோனா தடுப்பு மருந்துகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக எடுத்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயாராக இருக்க வேண்டும் என்றும், மோசமான நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஊரடங்கு கடைப்பிடிப்பதால் தொற்று பரவல் குறையும் என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்காக 5 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் பெறப்பட்டுள்ளதாகவும், 12 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கத் திட்டமிட்டு, 5592 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 12 மாவட்டங்களில் சித்த, ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு 475 டன் ஆக்சிஜன் தேவையுள்ள நிலையில் 419 டன் ஆக்சிஜன் மட்டும் ஒதுக்கியுள்ளதாகவும், வரும் நாட்களில் 800 டன் ஆக்சிஜன் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மத்திய அரசு நிறுவனத்தில் தடுப்பு மருந்து உற்பத்தி மையம் தொடங்க டெண்டர் விண்ணப்பிக்கக் காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்துத் தேசியப் பணிக் குழு பரிந்துரைக்கும் வரை தமிழகம் புதுச்சேரிக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்க வேண்டும் என்றும், டிஆர்டிஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments