தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

0 10704
தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க. சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக நுழைகிறது. இந்தநிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 7-ந்தேதி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் அன்றைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் மீண்டும் தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இன்றையக் கூட்டத்திலும் அதிமுகவினரிடையே கடும் வார்த்தைப் போர் நடந்ததாக கூறப்படுகிறது. அதிமுக இம்முறையும் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமிக்க இ.பி.எஸ்.தரப்பினர் முன்வந்ததாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்க்கட்சித் துணை தலைவராக நியமிக்க ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இருக்கமான முகத்துடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.

இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் சட்டப் பேரவைச் செயலரிடம் வழங்கப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகம் சென்று, கடிதத்தை வழங்கினர்.

முன்னதாக, தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது எனக் கருதி அதிமுக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments