முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது; பொதுப் போக்குவரத்துக்குத் தடை... நண்பகல் 12 மணி வரை காய்கறி- மளிகைக் கடைகள் திறப்பு..!

0 9279
முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது; பொதுப் போக்குவரத்துக்குத் தடை... நண்பகல் 12 மணி வரை காய்கறி- மளிகைக் கடைகள் திறப்பு..!

தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பேருந்து, டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொதுமக்கள் வசதிக்காக காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், பகல் 12 மணி வரை இயங்கும்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 24 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின்போது, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது. ஆட்டோ - டாக்சிகள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது, இங்கு, ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது, ஆனால், பிற கடைகளை திறக்க அனுமதி கிடையாது,

டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாது. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. சாலை ஓர கடைகளுக்கு அனுமதி கிடையாது,

முடிதிருத்தும் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது, ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்கும், பெட்ரோல் நிலையங்கள் முழுமையாக இயங்கும்,அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கும்,
திருமணத்தில் 50பேரும் இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்,

அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.

அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது,

முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments