முழு ஊரடங்கு எதிரொலி.. ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்வு..!

0 5292
முழு ஊரடங்கு எதிரொலி..! ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மும்மடங்கு உயர்வு

திங்கட் கிழமை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிற நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற திங்கட் கிழமை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்ற நிலையில், ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதனை பயன்படுத்தி, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் தொலைதூர ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு சொந்த ஊர் செல்வோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து சேலத்துக்கு படுக்கை வசதி கொண்ட குளிர் சாதன பேருந்தில் அதிகபட்சமாக 1397 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 1,600 ரூபாய் முதல் 2100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று, கோவில்பட்டிக்கு குளிர் சாதன வசதி இல்லாத சாதரண பேருந்திலேயே 2ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து கோவை செல்ல அதிகபட்ச கட்டணமே 1800 ரூபாய் ஆகும்.

ஆனால், தற்போது 2ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்ல இருக்கை மட்டுமே கொண்ட NON AC பேருந்துகளில் 2ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று, மதுரைக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக 200 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

அதேசமயம், கொரோனா காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அந்தந்த பேருந்து உரிமையாளர்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்துவதாகவும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, முழு ஊரடங்கை காரணம் காட்டி ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தக் கூடாது எனவும், கட்டண உயர்வில் ஈடுபடும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments