முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு அனுமதி?

0 52863
முழு ஊரடங்கு காலத்தில் எவை எவைக்கு அனுமதி?

திங்கட் கிழமை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பால் விநியோகம், கொரியர் சர்வீஸ், பத்திரிகை விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள் இயங்க எந்த தடையும் இல்லை. மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏ.சி. வசதியின்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பூக்கடைகள், நடைபாதை கடைகளும் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம்.

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்படலாம். சாலையோர உணவகங்களுக்கு அனுமதி இல்லை. அதேசமயம், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும். நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை செயல்படும்.

முழு ஊரடங்கு நாட்களில் நீதிமன்றங்கள் செயல்பட எந்த தடையும் இல்லை. ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம். ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் பேருந்துகளிலோ, சொந்த வாகனங்களிலோ அடையாள அட்டையுடன் சென்று வரலாம்.

திருமணத்தில் 50 பேருக்கு மிகாமலும், இறுதிச் சடங்கில் 20 பேருக்கும் மிகாமலும் கலந்து கொள்ளலாம். தொலைதொடர்பு மற்றும் அதனை சார்ந்த செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சரக்கு போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்படும்.

வங்கிகள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். ஏ.டி.எம்.மையங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments