தமிழகத்தில் முழு ஊரடங்கு..!

0 64622
தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் வருகிற 10-ஆம் தேதி முதல் 24-ம் தேதிவரை முழு ஊரடங்கை அமல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இந்த நிலையில், நாளொன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20ஆயிரத்தை தாண்டுவதால், தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 10ஆம் தேதிமுதல் 24-ம் தேதிவரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் இயங்கவும் அனுமதி இல்லை.

அதேசமயம், திருமணம், இறப்பு, நேர்முகத்தேர்வு உள்ளிட்டவற்றுக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்கலாம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும். முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது. ஏற்கனவே அறிவித்தபடி, உணவகங்கள், தேநீர் கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தளங்கள் மற்றும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க அனுமதி இல்லை. ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், மதுபான பார்கள், அருங்காட்சியங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதியில்லை.

தமிழகத்திலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கோயம்பேடு வணிக வளாகம் போன்ற மொத்த காய்கனி வளாகங்களில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.

தலைமைச் செயலகம், மருத்துவம், வருவாய், காவல் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளை தவிர்த்து, மற்ற மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களுக்கும் இந்த தடை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து தனியார் அலுவலகங்கள், ஐ.டி.நிறுவனங்கள் இயங்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிவிலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

வழிபாட்டு தலங்கள் இயங்கவும், குடமுழுக்கு, திருவிழாக்கள் நடத்தவும் விதிக்கப்பட்ட தடை தொடரும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிறுவனங்கள் இயங்கவும் கோடை கால சிறப்பு முகாம்கள் நடத்தவும் விதிக்கப்பட்ட தடையும் வழக்கம்போல் தொடர்கிறது.

முழு ஊரடங்கு நாட்களில், உணவு, மளிகை, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் ஆகியவை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யலாம். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற ஆன்லைன் டெலிவரி சேவைகளுக்கு அனுமதியில்லை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments