முதலமைச்சரானார் மு.க.ஸ்டாலின்... கலைஞர், அண்ணாவுக்கு மரியாதை..!

0 2674
பேரறிஞர் அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

தமிழக முதலமைச்சராக பதவியேற்றதை அடுத்து கலைஞர், அண்ணா, பெரியார் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பதவியேற்பு விழா முடிந்து ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேராக கலைஞர் வாழ்ந்து மறைந்த கோபாலபுரம் வீட்டுக்குச் சென்றார். அங்கு, கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மண்டியிட்டு வணங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்

இதேபோன்று, பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பிறகு வேப்பேரி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதோடு, அங்கு திரண்டிருந்த தொண்டர்களின் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இல்லம் சென்ற முதலமைச்சர், அன்பழகன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், சி.ஐ.டி. காலனியிள்ள கலைஞரின் இல்லத்துக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், ராசாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்று, கலைஞர் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்தார். அப்போது திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments