முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அரியணை ஏறினார் மு.க.ஸ்டாலின்

0 9331
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அரியணை ஏறினார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு அழைப்பிதழுக்கு ஒருவர் மட்டும் என்ற எண்ணிக்கையில் குறைவான நபர்களே பதவியேற்பு விழாவில் அனுமதிக்கப்பட்டனர்.

சரியாக காலை 8.45 மணிக்கு ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து பதவி ஏற்க ஆளுநர் மாளிகை நோக்கி மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். அப்போது வீட்டின் முன்பு திரண்டிருந்த திமுகவினர் உற்சாக முழக்கம் எழுப்பினர்.

ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தை மு.க.ஸ்டாலினுக்கு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.

பதவி ஏற்பு விழாவிற்கு வருகை தந்தை ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின், அமைச்சர்களையும், தனது குடும்பத்தினரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பதவி ஏற்பு விழா தொடங்கியது. மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மு.க. ஸ்டாலின் எனும் நான் என ஆளுநர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக் கூறி மு.க.ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.


மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற போது, மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்கலங்கி நெகிழ்ச்சியடைந்தனர்.

விழாவில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பாஜக சார்பில் இல.கணேசன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈஸ்வரன், விசிக தலைவர் திருமாவளவன், உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்க மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மகன் துரை தயாநிதி பங்கேற்றிருந்தார்.

துரை தயாநிதியை ஆரத்தழுவி உதயநிதி ஸ்டாலின் விழாவிற்கு வரவேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments