முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்

0 4553
முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்க உள்ளதால், ஆளுநர் மாளிகையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகள்,மற்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 8 பேர் என 133 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன், திமுக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து சட்டமன்ற திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின், நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அதனைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதத்தை, ஆளுநரின் செயலர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல், ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து வழங்கினார்.

ஆளுநர் மாளிகையில், திறந்தவெளியில் நாளை காலை, 9 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். அவருக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அவருடன், 28 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக, பதவியேற்பு விழா, எளிமையாக நடத்தப்பட உள்ளது. பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை, அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

விழாவில் பங்கேற்க, குறைந்த நபர்களை மட்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழுக்கு ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வருடன் பதவியேற்க உள்ள, அமைச்சர்கள் குடும்பத்திலிருந்தும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில், பதவிப் பிரமாண நிகழ்ச்சி முடிந்ததும், ஸ்டாலின், கலைஞர் நினைவிடம் மற்றும் தலைமைச் செயலகம் செல்கிறார். அங்கு, முதலமைச்சர் அறைக்கு சென்று, முக்கிய அறிவிப்பில் கையெழுத்திட உள்ளார்.இதற்கான ஏற்பாடுகளை, தலைமைச் செயலக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சராக நாளை மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருப்பதால், தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் அறை மற்றும் வளாகத்தை வர்ணம் பூசி புணரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காலையில் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா முடிந்ததும், காலைஞர் நினைவிடம் சென்று பிறகு தலைமைச் செயலகம் சென்று முக்கிய உத்தரவில் ஸ்டாலின் கையொப்பமிட இருக்கிறார். இதையொட்டி தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறை, புது வர்ணம் பூசி புனரமைக்கும் பணிகள் அதிகாரிகள் மேற்பார்வையில் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. 

நாளை முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் நிலையில், மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். முதலில் குரோம்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து. சைதாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து உடல் நலம் விசாரித்த ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். பின்னர் தியாகராயநகரில் ஆர்எம் வீரப்பனிடம் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்புகளின் போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே என்.நேரு மற்றும் பொன்முடி ஆகியோரும் உடன் இருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments