சொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்

0 4300
சொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகள் நிரம்பியுள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி தவித்து வருகின்றனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. புதிய கட்டுப்பாடுகள் ஏன் ? என்பது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதற்கு ஏற்ப கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.  செவ்வாய் ஒரே நாளில் கொரொனாவால் உயிரிழந்தவர்கள் 143 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்தாலும் உண்மையில் பலி எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகின்றது.

கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழக்கும் பலர் மாரடைப்பு, நுரையீரல் கோளாறு, சிறுநீரக கோளாறு, சர்க்கரை வியாதி என்று பல பல காரணங்கள் சொல்லி உறவினர்களிடம் கட்டுப்பாடுகளுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று நிபந்தனையுடன் ஒப்படைக்கப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி மூச்சுவிட சிரமப்பட்டு சிகிச்சைக்காக வெல்லும் பலருக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உடன் கூறிய படுக்கை வசதிகள் இல்லை. சேலத்தில் ஆக்ஸிஜன் படுக்கை முழுவதும் நிறைந்து விட்டதாகவும், கூடுதல் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட இருப்பதாகவும் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பரிதாபமாக பலியானதாக கூறப்படுகின்றது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சைக்காக கொரோனா நோயாளிகளுடன் ஆம்புலன்சுகள் அலறிக்கொண்டு இருக்கின்றன.

தனியார் மருத்துவமனைக்கு சென்றால் லட்சங்களுடன் சேர்த்து தங்கள் சொந்தங்களையும் பறிகொடுக்கும் அவலம் அரங்கேறிவருவதாக குற்றஞ்சாட்டும் நோயாளிகளின் உறவினர்கள், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் ரெம் டெசிவர் மருந்துக்காக பிச்சைக்காரர்கள் போல தங்களை அலையவிடுவதாக வேதனை தெரிவித்தார்.

இத்தனை உச்சகட்ட நிலைக்கும் ஒவ்வொருவரின் கவனமின்மையும், சுயக்கட்டுபாடின்மையும் தான் காரணம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே இந்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்த கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கட்டாயம் முககவசம் அணியுங்கள் கூடுமானவரை அவசியமில்லா இடங்களுக்கு செல்வதை தவிருங்கள், விழிப்புடன் இருங்கள், வீட்டிலேயே இருங்கள் , கும்பலை விட்டு விலகி இருந்தால் மட்டுமே கொரோனா தாக்காமல் தவிர்க்க முடியும் என்பதை உணருங்கள்..! தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது காலத்தின் கட்டாயம்..!

கொரோனாவின் தீவிரத்தையும், உயிரிழப்புகளையும் மனத்தில் கொண்டு, ஒவ்வொருவரும் தற்காப்புடன் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி செயல்பட வேண்டியது அவசியம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments