கொரோனாவுக்கு., தரமான சிகிச்சைக்கு அறிவுறுத்தல்.! மக்கள் இயக்கமாக மாற்ற அழைப்பு.!

0 2431

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அதிகாரிகளை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், காவல்துறை தலைவர், சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அப்போது, தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவை தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். 

இதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும், அப்போது தான், நமது பாதுகாப்பை உறுதி செய்திட முடியும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா இரண்டாவது அலை என்பது, முதல் அலையைவிட மிக மோசமானதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மக்கள் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அவசர, அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அப்படியே வெளியில் வரும்போதும், பேசுகிறபோதும், பணியிலிருக்கும் போதும் முகக்கவசம் கட்டாயம் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments