சாலையில் விழுந்த ரயில் ...இரண்டாக பிளந்த பாலம்...கண் இமைக்கும் நொடியில் கோர விபத்து

0 2550

மெக்சிகோ நாட்டில் மெட்ரோ பாலம் மீது ரயில் சென்றுகொண்டிருக்கும்போது பாலம் இடிந்து விழுந்து ரயில் விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டில் அண்மையில் நடந்த ஒரு ரயில் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நின்று கொண்டிருந்த டிரக் மீது அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த ரயில் மோதியதில் 49 பேர் உயிர் இழந்தனர். கிட்டத்தட்ட 200 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதேபோல தற்போது மெக்சிகோவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நகரின் தெற்கே உள்ள ஒலிவோஸ் மற்றும் டெசான்கோ ரயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் பயணித்துக் கொண்டிருக்கும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் பாலம் மீது மெட்ரோ ரயில் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாகப் பாலம் திடீரென உடைந்தது. அதன் விளைவாக அந்த மெட்ரோ ரயில் கீழே உள்ள பரபரப்பான சாலையில் விழுந்தது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளும் , ரயிலில் பயணம் செய்த பயணிகளும் விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தனர். இந்த கோர விபத்தில் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த அந்த மெட்ரோ ரயில் பாதை 2012 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அந்த ரயில் பாதையின் கட்டுமானத்தைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்குப் பின்னர் அந்த மெட்ரோ கட்டமைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கு இருக்கும் மக்கள் தொடர்ந்து கூறி வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments