கொரோனாவுக்கு., தரமான சிகிச்சைக்கு அறிவுறுத்தல்.! மக்கள் இயக்கமாக மாற்ற மு.க.ஸ்டாலின் அழைப்பு.!

0 3211

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அதிகாரிகளை மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கொரோனா கட்டுப்பாடுகளை சரியாக நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்தும், அதன் மூலம் மட்டுமே நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதால், அனைத்து துறைகளும் சிறப்பாக கண்காணித்துச் செயல்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவை தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை, மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கவும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும், அப்போது தான், நமது பாதுகாப்பை உறுதி செய்திட முடியும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல் என்பது அரசின் பணி என்றால், நோய் பரவாமல் தடுத்தல் என்பது அரசுடன் மக்களும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணியாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை என்பது, முதல் அலையைவிட மிக மோசமானதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மக்கள் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அவசர, அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அப்படியே வெளியில் வரும்போதும், பேசுகிறபோதும், பணியிலிருக்கும் போதும் முகக்கவசம் கட்டாயம் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

கபசுரக் குடிநீரை அருந்தவும், நோய் எதிர்ப்புச் சக்தி மிக்க காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments