9 வயது பிஞ்சைக் கொன்ற கஞ்சா போதை… தேவை தீவிர நடவடிக்கை..!

0 3592
9 வயது பிஞ்சைக் கொன்ற கஞ்சா போதை… தேவை தீவிர நடவடிக்கை..!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே நுங்கு வெட்டித் தருவதாக 9 வயது சிறுமியை தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கஞ்சா போதையில் இந்தக் கொடூரம் அரங்கேற்றப்பட்ட நிலையில், அப்பகுதியில் கஞ்சா விற்பனையை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று தாரமங்கலம் அடுத்த மாட்டையாம்பட்டியைச் சேர்ந்த அந்தச் சிறுமியை காணவில்லை என பெற்றோர் தேடியுள்ளனர். 

அதே பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவன், நுங்கு வெட்டித் தருவதாக சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து காட்டுப் பகுதிக்குச் சென்று தேடிப்பார்த்தபோது, தலையில் காயத்துடன் சிறுமியின் சடலம் அலங்கோலமாகக் கிடந்தது.

தலைமறைவாக இருந்த தனபாலை போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில் சம்பவத்தன்று கஞ்சா போதையில் இருந்த தனபால், நுங்கு வெட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை தனியாக அழைத்துச் சென்றுள்ளான்.

பின்னர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவன், அவர் வெளியில் சொல்லிவிடக் கூடாது என்று கழுத்தை நெரித்துள்ளான்.

இதனால் மூர்ச்சையான சிறுமியின் உடலில் லேசாக அசைவு இருப்பதைப் பார்த்த அவன், இரக்கமின்றி அவளது தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

கஞ்சா போதையில்தான் இந்தக் கொடூரத்தை தனபால் அரங்கேற்றி இருப்பதாகக் கூறும் போலீசார், ஆடுகள் திருடுவது, செல்போன் திருடுவது, பாலியல் ஆசை காட்டி கஞ்சா போதையில் பெண்களை தொல்லை செய்வது என பல்வேறு அட்டகாசங்களையும் அவன் செய்து வந்தது தெரியவந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஓமலூர், தாரமங்கலம், இளம்பிள்ளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments