சென்னையில் நாளை மாலை 6மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

0 2358
சென்னையில் நாளை மாலை 6மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் பதவியேற்பு விழா வரும் 7ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்று, 6ஆவது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது. இதன் அடுத்த கட்டமாக, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏக்கள் கூடி, மு.க.ஸ்டாலினை சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வார்கள். இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில்” கூட்டம் நடைபெறும் என்றும், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவர் ஆளுநரை சந்திது ஆட்சியமைக்க உரிமை கோருவார். அதைத் தொடர்ந்து ஆட்சியமைக்க வருமாறு திமுகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார்.

வரும் 7ஆம் தேதி, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பேரிடர் காரணமாக, ஆளுநர் மாளிகையில் எளியமுறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனவே வரும் 7ஆம் தேதி, ஆளுநர் மாளிகையில் புதிய அரசின் பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments