தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்.. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை..!

0 4150
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்.. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. கட்சிகளின் முன்னணி நிலவரம் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகத் தொடங்கும்...

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகளும், தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றும் முடிந்த பிறகு அதற்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக திரையில் அறிவிக்கப்படும். குறைந்தது 15 சுற்றுகளில் இருந்து அதிகபட்சமாக 30 சுற்றுகள் வரை செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிற்பகலுக்குள் வேட்பாளரின் முன்னணி விபரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடுமையாக பின்பற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர், வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன், கேமரா, துப்பாக்கி, வெடிபொருட்கள், குடை, டிபன் பாக்ஸ், பேனா, பாட்டில், திண்பண்டங்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. மேலும், வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே செல்லும் முகவர்களுக்கு மீண்டும் உள்ளே வர அனுமதி கிடையாது. நுழைவு சீட்டு வைத்திருக்கும் வாகனங்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த தனித்தனியாக இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்த கிருமிநாசினி, முகக்கவசங்கள், உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் உள்ளிட்டவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, அசம்பாவிதங்களை தவிர்க்க மையத்திற்கு வெளியே பேரிகார்கள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments