எங்க ஏரியா உள்ள வராத ’ ஹாட் ஸ்பாட் ‘ இது தான்..! சென்னை 600094

0 19942
எங்க ஏரியா உள்ள வராத ’ ஹாட் ஸ்பாட் ‘ இது தான்..! சென்னை 600094

சென்னையில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சூளை அண்ணா நெடும்பாதையில் அமைந்துள்ள சில தெருக்கள் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக உருமாறி உள்ளது

கொரோனான்னு ஒன்று கிடையாது... சும்மா ஏமாத்துறாங்க என்றும், கொரோனாவா .... ஒரு 10 நாள் அரசு ஆஸ்பத்திரியில் போய் நேரத்துக்கு சாப்பாடும், முட்டையும், கடலையும், மூலிகை தேனீரையும் சாப்பிட்டு விட்டு சந்தோசமா வரலாம் என்றும் கூறிவந்த வாய்கள், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்கள் உறவினர்களும் நண்பர்களும் படும் அவதிகளை கண்டு அச்சம் கொண்டு கலங்கித்தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த முறை கொரோனாவின் விபரீதத்தை உணராத பலர் 2ஆவது அலையில் பரவும் கொரோனா பெருந்தொற்றால் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 147 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்குள்ளாகி மூச்சு விட சிரமப்படும் நோயாளிகளுக்கு வழங்க தனியார் மருத்துவ மனைகளிடம் ரெம்டெசிவர் மருந்து போதுமான அளவில் கையிருப்பு இல்லை. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்துக்காக ஆயிரக்கணக்கானோர் நாட்கணக்கில் டோக்கனுடன் காத்திருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொள்ளை கட்டணம் வசூலிக்கும் நிலையில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் 49 சதவீத படுக்கைகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் உடனுக்குடன் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால், நோயாளிகள் தனியார் மருத்துவமனையை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 47 பேர் பலியாகி உள்ள நிலையில் சென்னை சூளைமேட்டில் உள்ள அண்ணா நெடும்பாதை, நேரு தெரு, பாரிதெரு, முதலாவது மற்றும் 2ஆவது வீரபாண்டி தெருக்கள் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக உருவாகி உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் மேற்கண்ட பகுதிகளில் இருந்து 80க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தங்களுக்கு வராது என்று அலட்சியம் காட்டாதீர்கள், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடை பிடியுங்கள், கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள், கைகளை கழுவுங்கள், அவ்வப்போது பாக்கெட் சானிடைசர் பயன்படுத்துங்கள். கூடுமானவரை ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட குளிர்ந்த பொருட்களை உண்பதை தவிர்த்து வெண்ணீர் குடிப்பதை வழக்கமாக்குங்கள்.

முகக்கவசம் இல்லா அலட்சியம் உங்களையும் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு அலையவிட்டு விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தனித்திருப்போம், விழித்திருப்போம் அவசியமின்றி வெளியில் சுற்றாமல் வீட்டிலிருப்போம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments