சட்டக் கல்லூரியில் மகளுக்கு மலர்ந்த காதல் சாதீயில் எரிக்கப்பட்ட தாய்..! ஆணவ தந்தையின் அட்டூழியம்

0 7228
சட்டக் கல்லூரியில் மகளுக்கு மலர்ந்த காதல் சாதீயில் எரிக்கப்பட்ட தாய்..! ஆணவ தந்தையின் அட்டூழியம்

நெல்லை சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடன் படிக்கும் மாணவரை திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறிய நிலையில். மகளை வீட்டில் இருந்து காதலனுடன்  அனுப்பிவைத்த மனைவியை காட்டுக்கோவிலுக்கு அழைத்துச்சென்று கணவன் பலியிட்டு தீவைத்து எரித்த திகில் சம்பவம் தூத்துக்குடி அருகே நடைபெற்றுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள தெற்கு கல்மேடு கிராமத்திலிருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலையில் உள்ள மணியாட்டி மாடசாமி கோவிலுக்கு அருகே காட்டுப்பகுதியில் கடந்த 23ஆம் தேதி ஒரு பெண்ணின் சடலம் எரிந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

முகம் மற்றும் உடல் கருகிய நிலையில் கிடந்த அந்த சடலத்தின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. அந்த சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தருவைக்குளம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடி நடராஜபுரம் 2வது தெருவைச் சேர்ந்த ரவுடி முனியசாமி என்பவரது மனைவி முருகலட்சுமி என்பது தெரியவந்தது. இந்த தம்பதியரின் மகள் வெங்கடேஸ்வரி நெல்லை சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் நிலையில் அவருக்கு உறவுக்கார இளைஞருடன் கடந்த 26ஆம் தேதி திருமண நடப்பதாக இருந்துள்ளது. திருமணத்துக்கு முந்தைய நாள் வீட்டில் இருந்து மாயமான மாணவி தன்னுடன் படித்து வந்த வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

முருக லெட்சுமி கொல்லப்பட்ட நிலையில் கணவர் முனியசாமி தலைமறைவானதால் போலீசார், அவரது கூட்டாளிகளை பிடித்து விசாரித்த போது, மகளின் காதலை சேர்த்து வைத்த முருகலெட்சுமி, சாதீக்கு பலியிடப்பட்ட கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது.

முனியசாமியின் தந்தைக்கு மூன்று மனைவிகள், மூவரின் மகன்களில் மூத்தவர் முனியசாமி என்பதால் அண்ணன் தம்பிகள் எப்போதும் ஒற்றுமையாக இருந்துள்ளனர். இவர்களில் 9 வழக்குகளில் தொடர்புடைய முனியசாமி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரது மனை மற்றும் மகள்களை அவர்களது மாமானார் பராமரித்து வந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஜெயிலில் இருந்து முனியசாமி வெளியே வந்த நிலையில் தனது மகள் வெங்கடேஸ்வரி தன்னுடன் படிக்கின்ற வேறு சாதி இளைஞரை காதலிப்பது தெரிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகளுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை செய்த முனியசாமி குற்ற வழக்குகளில் தொடர்புள்ள தனது உறவுக்கார இளைஞரை மாப்பிள்ளையாக தேர்வு செய்துள்ளார். இது அவரது மனைவி முருகலெட்சுமிக்கு பிடிக்கவில்லை.

ஏற்கனவே கணவனுக்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ள நிலையில் வீட்டிற்கு வருகின்ற மாப்பிள்ளையும் ரவுடியாக இருக்க வேண்டுமா? எனக் கேட்டு முருகலெட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு கணவன் வெளியில் சென்றிருந்த நேரம் முருகலெட்சுமி, தனது மகள் காதலித்து வந்த சட்டக்கல்லூரி மாணவரை அழைத்து பதிவு திருமணம் செய்வதற்கு தேவையான ஆவணங்களுடன் இருவரையும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது

திருமணம் நின்று போனதாலும், மகளை வேறு சாதி இளைஞருடன் அனுப்பி வைத்ததாலும், மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த முனியசாமி அதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நடித்துள்ளார். சம்பவத்தன்று தனது மனைவியிடம் அருகில் உள்ள மணியாட்டி மாடசாமி கோவிலுக்கு சென்று குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர சாமி கும்பிட்டு வரலாம் என்று ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த காட்டுப்பகுதியில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் ஆயுதங்களுடன் தயாராக இருந்த தனது சகோதரர்களுடன் சேர்ந்து தனது மனைவியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததோடு, அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக பெட்ரோல் ஊற்றி முருக லெட்சுமியை எரித்துவிட்டு அந்த கொலைவெறிக் கும்பல் தப்பிச் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

இதையடுத்து முனியசாமியின் கூட்டாளிகளான தூத்துக்குடியை சுப்புராஜ், சங்கர், நீலமேகம், தெற்கு கல்மேடு முத்துச்செல்வம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முனியசாமியையும், இந்த கொலைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்த சாதிய பின்புலம் கொண்ட பண்ணை அதிபர் ஒருவரையும் போலீசார் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.

அதேநேரத்தில் எரிந்த நிலையில் காணப்பட்ட சடலத்தில் எரியாமல் இருந்த கை மற்றும் கால்களில் உள்ள விரல் ரேகையை வைத்தும், பெட்ரோல் பங்கில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக வைத்து தருவைகுளம் காவல்துறையினர் இந்த வழக்கில் திறமையாக துப்பு துலக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments