கள்ளச்சந்தையில் "ரெம்டெசிவர்".. மருத்துவர் உட்பட மூவர் கைது..!

0 1852
கள்ளச்சந்தையில் "ரெம்டெசிவர்".. மருத்துவர் உட்பட மூவர் கைது..!

சென்னை தாம்பரத்தில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்தை விற்பனை செய்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அந்த மருந்தை விற்றது திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராகப் பணிபுரியும் நபர் என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து உயிர்காக்கும் மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் அதன் “டிமாண்ட்” அதிகரித்துள்ளது.

அதன் காரணமாக தனியார் மருத்துவமனைகள், மருந்துக் கடைகளில் ரெம்டெசிவிருக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டு கூடுதல் விலைக்கு விற்கும் சூழல் அதிகரித்தது. இதையடுத்து தமிழக மருத்துவ பணிகள் கழகம் மூலம் ரெம்டெசிவர் கொள்முதல் செய்யப்பட்டு அரசு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதனை நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்று பலரும் வாங்கிச் செல்கின்றனர்.

இந்தநிலையில் சென்னை தாம்பரத்தில் மருத்துவர் ஒருவர் காரில் அமர்ந்தவாறு ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்து வருகிறார் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற அதிகாரிகள், அவரிடமிருந்து 17 மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அவரது பெயர் முகம்மது இம்ரான்கான் என்பதும் மருத்துவர் என்பதும் தெரியவந்தது. திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் 4 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள ஒரு ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் வாங்கி, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருந்து கடைகளுக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளார். அவரிடமிருந்து வாங்கி மருத்துவர் இம்ரான்கான் ஒரு ரெம்டெசிவர் மருந்தை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதும் தெரியவந்தது.

மருத்துவர் முகம்மது இம்ரான்கான், அவரது உதவியாளர் விஜய் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 17 ரெம்டெசிவர் மருந்துகளை கைப்பற்றினர். தொடர்ந்து திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷும் கைது செய்யப்பட்டார். விக்னேஷ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராகப் பணியாற்றுபவர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments