போன் பே யில் வசூல் செய்த போலி போலீஸ்..! கர்தே ஜா…பர்தே ஜா..!

0 2589

திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் போலீசாருடன் சேர்ந்து வசூல் செய்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவர், நாளடைவில் தனியாக போன்-பே ஆப்பில் கணக்கு தொடங்கி தனியாக வசூல் வேட்டை நடத்தியதால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இரவு ரோந்து பணியின் போதும் வாகனச்சோதனையின் போதும், ஆயுதப்படை காவலர்கள் போல உடை அணிந்து கொண்டு போலீசுடன் நிற்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினர் செய்யும் அட்ராசிட்டிகள் சொல்லி மாளாது.

அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக வேலைபார்த்து வந்து தவமணி என்பவர் பணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் காக்கி பேண்ட் மட்டும் போட்டுக் கொண்டு உளவு பிரிவு போலீஸ் எனக் கூறி போன்-பே மூலம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு சிக்கி உள்ளார்.

ஆரம்பத்தில் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள டோல்கேட் மற்றும் மாவட்ட எல்லைச் சோதனைச்சாவடி பள்ளப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் வாகனச் சோதனை செய்யும்போது போலீசுக்கு மாமூல் வாங்கிக் கொடுக்கும் கையாளாக செயல்பட்டுவந்த தவமணி, முறைக்கேடான தொழில் செய்பவர்களிடம் இருந்தும் காவல்துறையினருக்கு வசூல் செய்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

தினமும் வசூல் மூலம் பல ஆயிரங்கள் கையில் புழங்கினாலும் போலீசுக்கு பங்கு கொடுத்த பின்னர் தனக்கு 500 ரூபாயோ 1000 ரூபாயோ மட்டுமே கிடைத்ததால், காவலர்களுக்கே தெரியாமல் போன் பே மற்றும் கூகுல் பே போன்ற செல்போன் செயலி வழியாக ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலம் தனது அக்கவுண்டிற்கு நேரடியாக 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வசூல் செய்து வந்துள்ளார்.

இத்தகவல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே காவல் நிலைய ஆய்வாளருக்கு தெரிய வந்ததோடு அவர்களது மாத வசூல் பாதிப்படைந்ததால் தவமணியை காவல்நிலைய பகுதிகுள்ளே வரக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகின்றது.

தேர்தல் வந்ததும் ஆய்வாளர்கள் மற்றும் சில காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து நீண்ட ஆண்டுகளாக அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரமிக்க காவலர்களின் உதவியோடு மீண்டும் களத்தில் குதித்த தவமணி பகிரங்கமாக ஆன்லைன் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளப்பட்டி சோதனைச்சாவடி பகுதியில் சிவகாசியிலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு அட்டைப்பெட்டி ஏற்றிச்சென்ற லாரியை மடக்கியுள்ளார்.

லாரி ஓட்டுனர் சித்திக்கிடம் தன்னை உளவுப்பிரிவு போலீஸ்எனக் கூறி அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்துள்ளார்.

எல்லா ஆவணங்களும் சரியாக இருந்த நிலையில் போதையில் வாகனம் ஓட்டி வருவதால் 5000 ரூபாய் அபராதம் கட்டவேண்டும் எனக் கேட்டுள்ளார்.

தான் மது அருந்தவில்லை என அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் ரூ.5,000 கொடுத்தால் தான் விடுவேன் என கூறி மிரட்டியுள்ளார் தவமணி.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என மறுத்த போதும் விடாத தவமணி தனது போன் பே கணக்கில் செல்போன் வழியாக பணம் செலுத்தச்சொல்லி கட்டாயப்படுத்தியதால், லாரி ஓட்டுனர் சித்திக் தவமணியின் போன்-பே எண்ணிற்கு பணத்தை அனுப்பிவிட்டு நடந்தவற்றை தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார்.

தனக்கு நேர்ந்த இக்கட்டான வசூல் கொடுமை வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது என்று வீடியோ ஆதாரத்துடன் மொபைல் எண் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியாவிடம் புகார் அளித்துள்ளார்.

மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இறங்கிய தனிப்படையினர் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் இருந்தால் அவரின் செல்போனை கைபற்றிக்கொண்டு தவமணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

போலீசார் துணையின்றி ஒரு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் எப்படி தனியாக கட்டாய வசூலில் ஈடுபட முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், தவமணியுடன் தொடர்புள்ள மாமூல் போலீசார் குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments