சிமெண்டு கொள்ளையர் மண்டையில் ‘நச்’ கோர்ட்டு வைத்த குட்டு..! ஐ.பி.எல்லால் விலை உயர்வா?

0 18277
சிமெண்டு கொள்ளையர் மண்டையில் ‘நச்’ கோர்ட்டு வைத்த குட்டு..! ஐ.பி.எல்லால் விலை உயர்வா?

சிமெண்டு உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் கூட்டு சேர்ந்து கொண்டு சத்தமில்லாமல் விலையை உயர்த்தியது குறித்து சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களில் சிமெண்டு மூட்டைக்கு 100 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

சென்னையைச் சேர்ந்த கிளாஸ்-1 ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஆர். செல்வராஜ் என்பவர் சிமெண்ட் விலை உயர்வு தொடர்பாக மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமிழகத்தில் சிமெண்ட் விலையேற்றம் சமீபகாலமாக உயர்ந்துள்ளதால், கொரோனா ஊரடங்கு காலத்தில், கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்கையாக தட்டுப்பாட்டை உண்டாக்கி, விலையை உயர்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டிடிருந்த செல்வராஜ், செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, சிமெண்ட் விலையை உயர்த்தி வரும் உற்பத்தியாளர்களின் கூட்டுச்செயல் பற்றி விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சிமெண்ட் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிமெண்ட் விலையேற்றம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி ஜூன் 3- ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிரடி உத்தரவிட்டுள்ளதால், சிமெண்டு உற்பத்தியாளர்கள் தலையில் நச் என்று குட்டு வைக்கப்பட்டுள்ளதாக கட்டுமான நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்தியாவை பொறுத்தவரை முன்னனி சிமெண்ட் தயாரிப்பாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான இண்டியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், டால்மியா சிமெண்ட் மகேந்திர சிங்கி, ராம்கோ சிமெண்ட்ஸ் வெங்கட்ராம ராஜா, செட்டிநாடு சிமெண்ட் எம்.ஏ.எம்.ஆர் முத்தையா அய்யப்பன், அல்ட்ரா டெக் சிமெண்ட் குமார் மங்களம் பிர்லா, மகா சிமெண்ட் ராமராவ்., ராஜு ராவ், நாகார்ஜுனா சிமெண்ட் ரவி, அம்புஜா சிமெண்ட் நீரஜ்கெளரி, சூவாரி சிமெண்ட் சுஷில்குமார் திவாரி உள்ளிட்டவர்கள் மட்டுமே இந்த தொழிலில் கொடி கட்டி பறக்கின்றனர்.

இவர்களில் இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் சீனிவாசன் மட்டும் சங்கர் சிமெண்ட், கோரமண்டல் சூப்பர் பவர், ராசி சிமெண்ட் உள்ளிட்ட 11 பெயர்களில் சிமெண்ட் தயாரித்து சந்தைக்கு அனுப்புகிறார். அவருக்கு அடுத்தபடியாக ராம்கோ சிமெண்ட் அதிபர் வெங்கட்ராம ராஜாவின் நிறுவனம் 5 வகையான சிமெண்டுகளை விற்பனைக்கு அனுப்புகின்றது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் 390 ரூபாய்க்கு விற்ற கோரமண்டல் சூப்பர் பவர் சிமெண்ட் 460 முதல் 490 ரூபாய் வரை விலையை உயர்த்தி கிராமப்புற கடைகளில் விற்கப்படுகின்றது. ராம்கோ சிமெண்ட் 390 ரூபாயில் இருந்து 450 முதல் 480 ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகின்றது. மொத்த கொள்முதல் கடைகள் பழைய விலையை விட 60 ரூபாய் வரை சிமெண்டு விலையை அதிகரித்துள்ள நிலையில் சில்லரை விற்பனை கடைகள் 100 ரூபாய் வரை விலையை உயர்த்தி உள்ளதாக கட்டுமான ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா முழுவதும் குறிப்பிட்ட சிலர் மட்டும் ஈடுபடும் இத்தொழிலில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களை கவனித்து விட்டு சிமெண்டு உறப்த்தியாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு விலையை உயர்த்தி விற்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ விசாரணையிலாவது சிமெண்ட் மூட்டையின் இந்த திடீர் விலையேற்றத்தின் பின்னணி வெளிச்சத்திற்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சிமெண்டு விலையேற்றத்தால் ஏராளமான கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. திடீர் விலையேற்றத்தால் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் கள் மட்டுமல்ல சொந்த வீடு கட்டும் கனவில் இருந்த பலர் நொந்து போயுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments