நகைகளை அடகு வைத்து உதவி.. அந்த மனசு தான் சார் கடவுள்..!

0 1661
நகைகளை அடகு வைத்து உதவி.. அந்த மனசு தான் சார் கடவுள்..!

கோவையில் நகைகளை அடமானம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு 100 மின்விசிறிகள் வாங்கிக் கொடுத்த தம்பதியின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பிரத்யேக கொரோனா சிகிச்சை மையமாக இயங்கி வரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, முற்றிலும் குளிரூட்டப்பட்ட மருத்துவமனை என்பதால், அங்கு மின்விசிறி வசதி அமைக்கப்படவில்லை. கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில் குளிர்சாதன வசதியையும் பயன்படுத்த முடியாது என்பதால், கோடைக்காலத்தில் நோயாளிகள் காற்றோட்டம் இல்லாமல் சிரமப்பட்டு வந்துளனர். இந்த நிலையில், விருப்பமுள்ளவர்கள் மின்விசிறி வழங்க முன்வரலாம் என இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி, இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்துள்ளனர். அங்கு விருப்பமுள்ளவர்கள் மின்விசிறி வழங்க முன்வரலாம் என்ற அறிவிப்பை கண்ட தம்பதியினர், தடுப்பூசி போட்டுக் கொண்டு வீட்டுக்குச் சென்ற கையோடு, நோயாளிகளுக்கு இலவசமாக மின்விசிறி வழங்க முடிவெடுத்துள்ளனர்.

உடனடியாக, இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வரை அழைத்து பேசிய அந்த தம்பதியினர், இலவசமாக மின்விசிறி வழங்குவதாக கூறி, 100 மின்விசிறிகளை வாங்கி டெம்போவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆச்சரியமடைந்த மருத்துவமனை முதல்வர், தம்பதியினரிடம் விசாரித்த போது, நோயாளிகளுக்கு உதவி செய்ய கையில் பணமில்லாததால் வீட்டில் இருந்த நகைகளை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்தது தெரியவந்தது.

இவ்வளவு சிரமப்பட்டு உதவி செய்ய வேண்டாம் என்று கூறிய மருத்துவமனை முதல்வரிடமும், ஆட்சியரிடமும், இந்த மின் விசிறிகள் அனைத்தும் நோயாளிகளுக்காக வாங்கி வரப்பட்டது என்பதால், அவர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் எனக்கூறி அந்த தம்பதியினர் அன்பு கட்டளை இட்டுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் கொண்டு வந்த மின்விசிறிகளை வாங்கி வைத்துக் கொண்ட மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், அவர்களுக்கு நன்றி தெரிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கி அனுப்பி வைத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments