அறியா சிறுமியும் 30 அரக்கர்களும்..! மூவர் மட்டுமே கைது

0 4711
அறியா சிறுமியும் 30 அரக்கர்களும்..! மூவர் மட்டுமே கைது

தாம்பரம் அருகே வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை உள்ளூர் இளைஞர்கள் மிரட்டி அழைத்துச்சென்று கூட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கர்ப்பமாக்கிய கொடுமை அரங்கேறியுள்ளது. 30 அரக்கர்களிடம் சிக்கி சீரழிந்த சிறுமியின் அறியாமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை தாம்பரத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, ஒருவர் எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்கு சென்று விடும் நிலையில் விவரமறியாத அந்த சிறுமியை அப்பகுதி இளைஞர்கள் அவ்வப்போது ஆசை வார்த்தை கூறி வெளியே தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகின்றது.

இதே போல் தொடர்ச்சியாக அத்துமீறியதால் அந்த சிறுமி கருத்தரித்துள்ளார். செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று 18 வயது நிரம்பியதாக கூறி அந்த சிறுமிக்கு கருகலைப்பு செய்துள்ளனர். இதனை வெளியில் சொன்னால் குடும்பதோடு கொலை செய்து விடுவதாகவும் சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர்.

அத்தோடு நிற்காமல் அதன் பின்னரும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை தொடர்ந்துள்ளனர். அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு கொண்ட சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்களால் சீரழிக்கப்பட்ட சிறுமி குறித்து அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கட்டிட வேலை செய்யும் கார்த்திக், வழக்கறிஞரின் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் புது மாப்பிள்ளை மணிகண்டன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தாம்பரம் தொகுதி திமுக வலைதள பொறுப்பாளராக உள்ள தனசேகரன் உள்ளிட்ட, தலைமறைவாகி விட்ட 28 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அனைவரையும் கண்டறிந்து கைது செய்து முறையாக விசாரித்தால் அயனாவரம் சம்பவம் போல் கைது படலம் நீடிக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றார் சமூக ஆர்வலர்.

வழக்கை வாபஸ் பெறுமாறு சிறுமியின் குடும்பத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருபவர்களையும் கைது செய்து சிறுமிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இத்தகையை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்பதே கசப்பான உண்மை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments