கடன் வாங்கித் தருவதாக; கள்ள நோட்டுகளை காட்டி மோசடி..!

0 3394
கடன் வாங்கித் தருவதாக; கள்ள நோட்டுகளை காட்டி மோசடி..!

சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மியான 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை காண்பித்து நம்பவைத்து, குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி கமிஷன் பணம் வாங்கிய பெண்ணை கன்னியாகுமரி போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த வெள்ளாங்கோட்டில் உள்ள தனியார் முந்திரி ஆலையில் கள்ளப் பணம் பதுக்கி வைத்திருப்பதாக உளவு பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, மாருதி ஈகோ வேன் ஒன்றில் 3 இரும்பு லாக்கர்கள் இருந்துள்ளன.

அவற்றில் சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மியான 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 50 லட்ச ரூபாய் அளவுக்கு கட்டுக்கட்டாக இருந்தன. போலி நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில் அந்தக் காரும் டம்மி பணமும், பளுகல் பகுதியில் பம்பா ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சிந்து என்ற பெண்ணுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. சிந்துவை கைது செய்து விசாரித்ததில், குறைந்த வட்டிக்கு பெருந்தொகையை கடனாக எதிர்பார்க்கும் நபர்களை குறிவைக்கும் அவர், தாம் கடன் பெற்றுத் தருவதாகவும் அதற்கு கமிஷனாக குறிப்பிட்டத் தொகை தர வேண்டும் என்றும் அவர்களிடம் கூறுவார்.

பின்னர் சம்மந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு அந்த போலி பணத் தாள்கள் அடங்கிய லாக்கர்களுடன் செல்லும் சிந்து, லாக்கரை சில நொடிகள் திறந்து பணத்தைக் காட்டிவிட்டு பூட்டி விடுவார். அந்தப் பணம் அவர்களைப் போலவே கடன் கேட்ட வேறொரு நபருக்கு எடுத்துச் செல்லப்படும் பணம் என்று கூறுவார். கட்டுக்காக லாக்கரில் இருக்கும் பணத்தைப் பார்த்து, கடன் கேட்ட நபர்களுக்கு சிந்து மீது அபரிவிதமான நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கையை சாதகமாக்கி, அவர்களிடம் கமிஷன் தொகையாக சில லட்சங்களை கறந்துவிடுவார் சிந்து என்கின்றனர் போலீசார்.

கமிஷன் தொகை கைக்கு வந்ததும், தாம் கொண்டு வந்த லாக்கரை அங்கேயே வைத்துவிட்டு பிறகு வந்து எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறி சென்றுவிடுவார் சிந்து. சில நாட்கள் கழித்து சிந்துவின் உதவியாளர் என்ற பெயரில் வரும் நபர், லாக்கரை எடுத்துச் செல்வதாகவும் ஓரிரு நாளில் உங்களுடைய கடன் தொகையோடு சிந்து வீட்டுக்கு வருவார் என்றும் கூறி சென்றுவிடுவான் என்று கூறப்படுகிறது.

பணத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் போன் செய்தால், ஊரடங்கு காரணமாக வங்கி நடைமுறைகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பணத்தை எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் நம்பும்படி பேசிவிடுவார் என்கின்றனர் போலீசார். இப்படி சிந்துவால் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சிந்துவின் இந்த நூதன மோசடி வித்தையைக் கண்டு அதிர்ச்சியான போலீசார், அவரைக் கைது செய்து மாருதி ஈகோ கார், லாக்கர்கள், அதிலிருந்த டம்மி நோட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கேரளாவைச் சேர்ந்த சினிமா இயக்குனர் ஒருவர்தான் சிந்துவுக்கு இந்த டம்மி நோட்டுகளைக் கொடுத்திருப்பதாகக் கூறும் போலீசார், அவர் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments