ஓவர் ஓவர்.. போலீஸ் வண்டியையே தூக்கிட்டாங்க ஓவரோ ஓவர்..! மதுப்பிரியர் லீலைகள்..!

0 8336
ஓவர் ஓவர்.. போலீஸ் வண்டியையே தூக்கிட்டாங்க ஓவரோ ஓவர்..! மதுப்பிரியர் லீலைகள்..!

திருப்பூரில் போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்ட காவல் ஆய்வாளரின் பொலிரோ வாகனத்தை திருடிச்சென்ற குடிமகன் ஒருவர், தாறுமாறாக ஓட்டிச் சென்று சாலையில் வண்டியுடன் உருளும் நிலைக்குத்தள்ளப்பட்டார். 

திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்துக்கு நிலையான கட்டிடம் ஏதும் இல்லாததால் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தற்காலிக செட் ஒன்றில் காவல் நிலையம் இயங்கி வருகின்றது.

இங்கு ஆய்வுக்கு வந்த உதவி ஆணையரை வரவேற்று காவல் ஆய்வாளர் தினேஷ் வழக்கு விவரங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது அவரது கார் ஓட்டுனர் ராஜகுரு, காவல் நிலையத்துக்கு வெளியில் பொலிரோவை சாவியுடன் நிறுத்தி வைத்து விட்டு கழிவறைக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொலிரோவை காணவில்லை. அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மதுபோதையில் தள்ளாடியபடி வந்த மர்ம ஆசாமி ஒருவர் போலீஸ் வாகனத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் ஊத்துக்குளி சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் ஒன்று நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி லாரி ஒன்றில் மோதி உருண்டது.

அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று காரை ஓட்டி வந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

அப்போது உருண்டுகிடந்த போலீஸ் வாகனத்தில் இருந்த வாக்கி டாக்கியில் மர்ம ஆசாமி ஒருவர் போலீஸ் வாகனத்தை திருடிக் கொண்டு ஊத்துக்குளி சாலைவழியாக தப்பிச்செல்வதாக தகவல் சொல்லப்பட்டது.

அதன்பின்னர் தான் அங்கிருந்தவர்களுக்கு தெரிந்தது, திருடப்பட்ட போலீஸ் வாகனமே அதுதான் என்று..! உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் போலீஸ் வாகனத்தை திருடிச்சென்றவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மதுப்பிரியர் விஜயன் என்பது தெரிய வந்தது.

திருப்பூருக்கு வேலைதேடி வந்தவரிடம் மாஸ்க் அணியவில்லை என்று போலீசார் அபராதம் விதித்ததால், பதில் அடி கொடுப்பதற்காக விஜயன் போலீஸ் வாகனத்தை கடத்திச்சென்றதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் போலீசார் அதனை மறுத்தனர். குடி போதையில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் விஜயன் செய்து விட்டதாகவும் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

கடந்த முறை கொரோனா ஊரடங்கின் போது கேரம் போர்டுடன் இளைஞர்களை ஓடவிட்ட திருப்பூர் போலீசாரை, இந்த முறை போலீஸ் வாகனத்தை திருடிச்சென்று வாக்கி டாக்கியில் தேடவிட்டுள்ளார் இந்த விபரீத மதுப்பிரியர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments