வாகன நெரிசலுக்கு குட்-பை; இனி பறந்து செல்லலாம்..!

0 50516
வாகன நெரிசலுக்கு குட்-பை; இனி பறந்து செல்லலாம்.!

சென்னை வேளச்சேரியில் உள்ள விஜயநகர் சந்திப்பில் அமைக்கப்பட்டுவரும் மேம்பாலமானது கிட்டத்தட்ட 5 ஆண்டுகால போராட்டங்களுக்கு பின் இறுதிக்கட்ட பணியை எட்டியுள்ளது.

சென்னையில் வாகன நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று, குறிப்பாக வேளச்சேரியில் உள்ள விஜயநகர் சந்திப்பு எப்போது வாகன நெரிசலுடன் காணப்படும். அதற்கு காரணம் தரமணி லிங்க் ரோடு, தாம்பரம் பைபாஸ் ரோடு மற்றும் கிண்டி பிரதான சாலை ஆகிய மூன்று சாலைகளும் சந்திக்கும் இடமாக விஜயநகர் சந்திப்பு உள்ளது.

அங்கு ஏற்படும் வாகன நெரிசலுக்கு தீர்வுக்காணும் விதமாக கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விஜயநகர் சந்திப்பில் இரண்டு பறக்கும் பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கியது. நிலம் கையகப்படுத்துதல், மாநகராட்சி குடிநீர் குழாய்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாலம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டுவந்த இரண்டு பறக்கும் பாலங்களில் ஒரு பாலமானது, மே மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரமணி லிங்க் ரோட்டிலிருந்து கிண்டி சாலையை விஜயநகர் சந்திப்பில் சிக்காமல் கடக்க உதவும் இந்த பறக்கும் பாலத்தின் கட்டுமான பணிகள் இரண்டு நாட்களில் நிறைவடையும் எனவும், பாலத்தில் எல்.இ.டி மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெறவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பறக்கும் பாலமானது பயன்பாட்டிற்கு வந்தால் நிச்சயமாக வாகன ஓட்டிகள் நிம்மதி அடைவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மற்றொரு பறக்கும் பாலமானது ஜூலை மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளன. இரு பாலங்களும் புழக்கத்திற்கு வந்துவிட்டால், வாகன ஓட்டிகள் விஜயநகர் சந்திப்பிற்கு மேல் பறந்து தான் செல்வார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments