தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

0 3452
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க  உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யவதற்காக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

அப்போது கொரோனா பாதிப்பால் நாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த நீதிபதி, ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்க ஆதரவு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவதற்காக மத்திய அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை வழங்குவதில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் 10 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க முடியுமா என்று நீதிபதி எழுப்பிய கேள்விக்கு வேதாந்தா நிறுவனம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்றும், வேறு எந்த பணிகளும் மேற்கொள்ள கூடாது என்றும் நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய தொகுப்பில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த 3 நிபுணர்களை பரிந்துரைக்குமாறு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்தை நீதிபதி கேட்டுக்கொண்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தரப்பில் 2 நிபுணர்களை நியமித்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்தார்.

உள்ளுர் மக்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம் என்று குறிப்பிட்ட நீதிபதி, உள்ளுர் பிரதிநிதிகள் அடங்கிய மேற்பார்வை குழுவை அமைக்கலாம் என்றும், அவர்களை நிபுணர் குழு தேர்வு செய்யலாம் என்றும் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments