அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை... கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய விவாதம்!

0 1988
அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். மருந்துப் பொருட்கள் மற்றும் தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை இந்தியாவுக்கு வழங்குவதற்காக பிரதமர் நன்றி தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களையும், பல்வேறு மருத்துவ சாதனங்களையும் அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்தியாவுக்குத் தேவையான ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகளை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறியிருந்தது. இதையடுத்து, முதல்கட்டமாக 318 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். தடுப்பூசிக்கான மூலப் பொருட்கள் விநியோகம் சுமூகமாக நடைபெற வேண்டியது அவசியம் என்பதால், அது தொடர்பாக விவாதித்ததாக தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், இரு நாடுகளின் கொரோனா நிலவரம் குறித்து விரிவாகப் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் உதவிக்கு தாம் நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ள மோடி, உலகளாவிய கொரோனா சவாலை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து வெல்ல முடியும் என்று பைடனிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது பேசிய ஜோ பைடன், கொரோனாவுக்கு எதிராகப் போரிடும் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதி அளித்தார். முன்னர் இந்தியா உதவியதைப் போல் தற்போது தாங்கள் உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்குவது தொடர்பாக பேசி வருவதாகவும், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments