திருமண நிச்சயதார்த்தம் மகிழ்ச்சியை சீர்குலைத்த ஆம்னி பஸ் ஓட்டுனர்..! எங்கேயும் எப்போதும் விபரீதம்..!

0 7669
திருமண நிச்சயதார்த்தம் மகிழ்ச்சியை சீர்குலைத்த ஆம்னி பஸ் ஓட்டுனர்..! எங்கேயும் எப்போதும் விபரீதம்..!

கூவத்தூர் அருகே அரசு பேருந்து மீது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் ஆம்னி பேருந்து மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்ற அவசரபுத்தி ஆம்னி பேருந்து ஓட்டுனரால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் . இவரது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக கல்பாக்கத்தில் உள்ள பெண் வீட்டிற்கு உறவினர்கள் ஆம்னி பேருந்தில் புறப்பட்டுள்ளனர்.

பேருந்து கூவத்தூர் அருகே செண்டர் மீடியன் ஏதுமில்லா இருவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஆம்னி பேருந்து ஓட்டுனர் முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்றுள்ளார். கார் ஓட்டுனர் வழி கொடுக்காமல் செல்ல, ஆம்னி பேருந்து ஓட்டுனர் முந்திச்செல்வதில் முனைப்பு காட்டியுள்ளார்.

வேப்பஞ்சேரி கிராமத்தின் அருகே சென்ற போது காரை முந்திசெல்ல அதிவேகத்துடன் பேருந்து இயக்கியுள்ளார். ஆம்னி பேருந்து ஓட்டுனர். அதற்குள்ளாக எதிர் திசையில் வந்த அரசு பேருந்தின் முன்பக்க பக்கவாட்டு பக்கத்தில் பயங்கரமாக மோதியது ஆம்னி பேருந்து.

மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்தின் ஓட்டுனர் இருக்கையை ஒட்டிய வலது பக்கம் உடைந்து சிதைந்து போனது, அரசு பேருந்து ஓட்டுனர் அந்த நிலையிலும் தனது பேருந்தை இடது பக்கமாக திருப்பிச்சென்று அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் இறக்கியுள்ளார். இருந்தாலும் அரசு பேருந்து மீது மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

அந்த இடத்தை சுற்றி அலறல் சத்தம் கேட்டது. 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் 12 க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அரசு பேருந்து ஓட்டுனர் உள்ளிட்ட பலரை அந்த கிராமத்து மக்கள் காயங்களுடன் மீட்டனர்

காயங்களுடன் மீட்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கத்தனர்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்னி பேருந்து ஓட்டுனர் அதிவேகத்தில் வந்ததே விபத்திற்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆம்னி பேருந்து ஓட்டுனரின் அதிவேகத்தால் திருமணம் என்ற சுப நிகழ்ச்சியின் ஆரம்ப புள்ளியில் இணைய இருந்த மணமக்களின் வாழ்வில் விபரீதம் அரங்கேறியதோடு, அவர்களது உறவினர்களை கண்ணீர் கலந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதே நேரத்தில் கவனக்குறைவால் விபத்துக்கள் எங்கேயும் எப்போதும் நிகழ்ந்தாலும் வீம்புக்கு வேகமெடுத்து விபத்துக்களை ஏற்படுத்துவோரின் அலட்சியம் பலரை பாதிப்புக்குள்ளாக்கி விடுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments