கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடு அமல்

0 6953
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடு அமல்

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்துள்ளது.

தமிழக அரசு வரும் 30ந் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்களுக்கு அனுமதியில்லை.

அனைத்து மதக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே போன்று, பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மளிகை, காய்கறிக்கடைகள் மற்றும் இதர அத்தியாவசிய கடைகள் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்படும். எனினும் வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகள் இயங்காது.

மளிகை உள்ளிட்ட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள், குளிர்சாதன வசதி இன்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கும்.
அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்காது.

அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. விடுதி உணவு கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை எனவும், அவரவர் அறைகளில் வழங்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பேருந்துகள், ஆட்டோ- டாக்சி உள்ளிட்டவற்றில் பயணம் செய்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரவுநேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் வங்கிகள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments