பல மாநிலங்களில் முழு ஊரடங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை..!

0 1571
பல மாநிலங்களில் முழு ஊரடங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை..!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இன்றியமையாப் பணிகளுக்கான போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பல மாநிலங்களில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் நாளைக் காலை 6 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனால் ஸ்ரீநகரில் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் ஆகியன மட்டும் திறந்துள்ளன. இன்றியமையாப் பணிகளுக்கான வாகனப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் நாளைக் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் லக்னோ, கோரக்பூர், அலிகர் நகரங்களில் சந்தைகள், கடைகள் மூடப்பட்டுள்ளன. சந்தைப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன. 

டெல்லியில் கொரோனா பரவலைத் தடுக்க ஆறு நாள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் இறுதி நாளான இன்று இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோர் மட்டும் சாலைகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்களில் வருவோர் அடையாள அட்டைகளைக் காட்டிய பின்னரே காவல்துறையினர் அவர்களைச் செல்ல அனுமதித்தனர். 

மத்தியப் பிரதேசம் மாண்ட்சாரில் ஊரடங்கு விதிகளை மீறித் தெருவில் நடமாடிய இளைஞர்களைத் தோப்புக்கரணம் போடச் செய்து காவல்துறையினர் எளிய தண்டனை வழங்கினர்.  

கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஹுப்ளியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோரை மட்டுமே அனுமதித்தனர்.

கர்நாடகத்தில் நாளைக் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிப்பதால் சிவமோகா நகரில் பொதுமக்களின் வசதிக்காக இன்று காலை 6 மணி முதல் பகல் 10 மணி வரை உணவகங்கள், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துத் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments