முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம் ..!

0 7562

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலான நிலையில், சாலைகள், கடைத்தெருக்கள் வெறிச்சோடின. கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரால், அவசியமின்றி வெளியில் சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை மாநகரில் அண்ணாசாலை, கோயம்பேடு, கிண்டி, சைதாப்பேட்டை, ராயப்பேட்டை என அனைத்து முக்கியப் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள், திருமண அழைப்பிதழ்களை அனுமதிச் சீட்டு போலக் காட்டி தடையின்றிப் பயணம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாலத்தில் முக்கிய பகுதிகளில் போலீசார், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட சில திருமணங்கள் மட்டும் சொற்ப அளவிலான உறவினர்களுடன் கோவில்களில் நடைபெற்றன.

 

சேலம் மாநகரிலுள்ள பெரும்பாலான மண்டபங்களில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏராளமானோர் திரண்டிருந்த 3 திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

 

மயிலாடுதுறையில் அனுமதியின்றி இயங்கி வந்த இறைச்சிக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.சாக்குப் பையில் மறைத்து வைத்து மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்டவைகளை கடை உரிமையாளர் விற்பனை செய்து வந்துள்ளார்.

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மூடப்பட்டதால், ஏற்கனவே திருமண நிகழ்வுகளுக்கு ஒப்பந்தம் செய்திருந்தவர்கள், கோவிலை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

 

சேலம் மாவட்டம் எடப்பாடி நகரில் அத்தியாவசியப் பணிகளுக்கே சென்றாலும் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு நகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்தனர். அவர்களில் சிலர் அபராதம் செலுத்த முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஊரடங்கை மீறி இயங்கி வந்த பூக்கடைகளுக்கு பூட்டு போட்ட நகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளர்களை எச்சரித்துச் சென்றனர்.

 

இதேபோன்று தமிழ்நாடு முழுவதும், ஒருநாள் முழு ஊரடங்கு காரணமாக, நகரப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் வெறிச்சோடின

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments