முதல் முறையாக அரசு ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் உற்பத்தி..! தமிழக அரசு தீவிரம்

0 23784
முதல் முறையாக அரசு ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் உற்பத்தி..! தமிழக அரசு தீவிரம்

தமிழக மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக நோயாளிகளின் பயன்பாட்டுக்காக சென்னை அண்ணா நகர் அரசு மருத்துவமனையில்  நிமிடத்திற்கு 150 லிட்டர் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மையத்திற்கான கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய  6045 கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் சனிக்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 14842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த இரு வாரங்களில் கொரோனாவால் ஏற்படக்கூடிய பாதிப்பை கருத்தில் கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றினால் 95 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்றுக்குள்ளான 50.8% பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 8% பேர் கொரோனா கேர் மையங்களிலும், மீதமுள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் மூச்சுத்தினறலில் இருந்து உயிர்களை காக்கக்கூடிய மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், நோயாளிகளை காக்கும் விதமாக, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டுள்ளது
.
இதன் ஒரு பகுதியாக, தமிழக மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள புறநகர் அரசு மருத்துவமனையில் 2 கிலோ லிட்டர் அளவிளான திரவ ஆக்ஸிஜன் உற்பத்திகலன் அமைப்பதற்கான கட்டமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

இந்த ஆக்ஸிஜன் உறபத்தி மையம் செயல்பாட்டிற்கு வரும் போது ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மையமாக அமைக்கப்பட உள்ளது.

இந்த திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம் சோதனை அடிப்படையில் சென்னையில் அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான வழிகாட்டு நெறிமுறையின் படி புதிய கட்டுமான பணிகள் நடத்தப்பட்டு, அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் 3319 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கை வசதி உள்ளதாகவும், தற்போது கூடுதலாக 2400 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அமைக்கபடவுள்ளது. இதே போல் தமிழகம் முழுவதும் 12 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தற்போதுள்ள 10603 ஆக்ஸிஜன் வசதிகொண்ட படுக்கைகளுடன் கூடுதலாக 3645 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள 36 அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் 720 டன், ஆக்ஸிஜனை சேமித்து வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் தனியார் மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சேமிப்பு மையத்தையும் கணக்கிட்டால் 1200 டன் வரை சேமித்து வைக்கக்கூடிய வசதியும் தமிழகத்தில் உள்ளதால் தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று சுகாதாரத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பராமரிப்பு மையங்களில் 40 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளதால் அடுத்த இரு வாரங்களில் ஏற்படக்கூடிய நோய் பரவலை தடுக்கவும், தொற்று ஏற்பட்டோருக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும் சுகாதாரத்துறையினர் தயாராக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் 2007 ஆம் ஆண்டே ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டதாக சிலரால் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவரும் தகவலை வதந்தி என்று சுகாதாரத்துறையினர் மறுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments