தமிழ்நாட்டில் இன்று 14,842 பேருக்கு கொரோனா உறுதி

0 4235

தமிழ்நாட்டில், ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, முதன்முறையாக 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் பெருந்தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. 

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 14,842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 9,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், இணைநோய் இல்லாத 13 பேர் உட்பட 80 பேர் உயிரிழந்தனர். இந்த 80 பேரில், சென்னையைச் சேர்ந்தவர்கள் 25 பேர். அண்மை நாட்களில் இதுவே அதிகமான கொரோனா உயிரிழப்பாகும். மேற்குவங்கத்திலிருந்து வந்த 18 பேர், பீகாரிலிருந்து வந்த 10 பேர் உட்பட வெளிமாநிலங்களிலிருந்து வந்த 43 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை பெருநகரில், மேலும் 4086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1163 பேருக்கும், கோயம்புத்தூரில் 1004 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 793 பேருக்கும், மதுரையில் 596 பேருக்கும், திருநெல்வேலியில் 525 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 454 பேருக்கும், ஈரோட்டில் 392 பேருக்கும், திருச்சியில் 302 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் நான்கு இலக்கத்திலும், 29 மாவட்டங்களில் மூன்று இலக்கத்திலும் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 557 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஆளாகியுள்ளனர். சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 1,00,668 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments