மாஸ்கிற்கு ரூ 5 ஆயிரம் அபராதம் போட்டு கொலைவெறி தாக்குதல்..! குண்டர்களான அதிகாரிகள்..!

0 6321
மாஸ்கிற்கு ரூ 5 ஆயிரம் அபராதம் போட்டு கொலைவெறி தாக்குதல்..! குண்டர்களான அதிகாரிகள்..!

சென்னை அம்பத்தூரில் மாஸ்க் அணியாததற்கு 5 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்து அடாவடி வசூலில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர் ஒருவர், தன்னை தட்டிக்கேட்ட வியாபாரியை கடைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரொனாவை விட கொடுமையான கொள்ளையாக மாறிவரும் கறார் வசூல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை விட சில அதிகாரிகள் அபராத வசூல் என்ற பெயரில் செய்யும் அடாவடிகள் எல்லை மீறி வருகிறது.

அம்பத்தூர் அத்திப்பட்டு அடுத்த ஐ.சி.எப் காலனி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் செயல்பட்டு வரும் திருப்பூர் காட்டன் என்ற கடையில் சுகாதார ஆய்வாளர் பாரதிராஜா தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்ட போது அந்த கடைக்கு துணி வாங்க வந்த வாடிக்கையாளர் முககவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த கடையின் உரிமையாளரிடம் கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி 5000 ரூபாய் அபராதம் வித்துள்ளார் பாரதிராஜா, அந்த கடைக்காரரோ, ஒரு நாளைக்கு விற்கும் ஜவுளிகளால், வாடகை செலுத்துவதற்கு கூட வழியின்றி வட்டிக்கு கடன் பெற்று தொழில் செய்வதாக தனது நிலைமையை எடுத்துச் சொன்னதோடு முககவசம் அணியவில்லை என்றால் 200 ரூபாய் தானே அபராதம் எதற்காக 5 ஆயிரம் ரூபாய் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

பாரதிராஜா அதற்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தொகையை அபராதமாக வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதனால் பணத்தை கொடுக்குமாறு கறாராக கூறியுள்ளார். அங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து அருகில் அரிசி கடை நடத்திவரும் வணிகர் பாதுகாப்பு பேரவை செயலாளர் லட்சுமணன் என்பவர் சென்று பாரதிராஜா குழுவினரிடம் சமாதானம் பேசியுள்ளார்.

அபராத தொகையை கொடுக்க மறுத்து கடைக்காரர்கள் காலதாமதப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த பாரதிராஜா சப்போர்ட்டுக்கு நானும் ஆள கூப்பிடுகிறேன் எனக்கூறி அருகில் உள்ள பகுதியில் இருந்து கூலிப்படை ரவுடி ஒருவனை அழைத்ததாக கூறப்படுகின்றது. அவன் வந்ததும் அரிசிக்கடைக்குள் அத்துமீறி நுழைந்து லட்சுமணனை சரமாரியாக தாக்கியுள்ளான்

அவனுடன் சேர்ந்து பாரதிராஜாவுடன் சென்ற ஊழியர்கள் சிலரும் லட்சுமணனை கடைக்குள் வைத்து சரமாரியாக அடித்து மிரட்டி பணத்தை கேட்டுள்ளனர்

வழிப்பறி கொள்ளையர்கள் போல அடாவடியாக நடந்து கொண்ட மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பாரதிராஜா தலைமையிலான கும்பல், மக்கள் கூடுவதை பார்த்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. காயமடைந்த லட்சுமணன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்ட நிலையில், வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய காவல்துறையினர் இரு தரப்பையும் அழைத்து சமரசம் பேசிவருவதாகவும், வியாபாரியை புகாரை திரும்பப் பெறச்சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்ற மக்களிடம் அபராதம் என்று கெடுபிடி வசூல் செய்வதற்கு குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments